தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதீய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு

மும்பை, தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இந்தியரங்களில் மோசடி செய்யப்படுகிறது, ஹேக்கிங் செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது தொடர்கதையாகி வருகிறது. தேர்தல் நடைபெறுகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குப்பதிவானதை தெரிவிக்கும் விதமாக பா.ஜனதா சின்னத்தில் விளக்கு எரிகிறது என்ற குற்றச்சாட்டும் தேர்தல் நேரங்களில் முன்வைக்கப்பட்டது. இயந்திரத்தில் மோசடி என்பதை தேர்தல் ஆணையமும் மறுத்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதீய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது என பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா பகிரங்கமாக சாடிஉள்ளது.

கர்நாடகாவில் பெருமளவு போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது, கர்நாடகாவில் தேர்தல் செயல்முறைகள் எப்படி மோசமான நிலையை எட்டி உள்ளது என்பதை காட்டுகிறது எனவும் சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

சிவசேனாவின் கட்சி பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், “காங்கிரஸ் இல்லாத பாரதம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். காங்கிரசும் முடிவுக்கு சென்றுக்கொண்டு இருந்தாலும், அதனுடைய சிந்தனைகள் இறக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் குணங்களை கொண்டு அக்கட்சியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா முயற்சி செய்கிறது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

“தேர்தல்களில் அதிகமான அளவு பணம் செலவு செய்யப்படும் என்பது வழக்கமானதாக இருக்கிறது. பாரதீய ஜனதாவிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கிறது இனியும் ரசியமாக இருக்காது, அது எல்லோருக்கும் தெரிந்தது. பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் பணம் புரளுவது வழக்கமானது. பணம் வழங்குவதை காங்கிரஸ் தொடங்கியது, இப்போது பா.ஜனதா பின்பற்றுகிறது. பாரதீய ஜனதா எங்களுடைய தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். ஏமாற்றியோ, தவறான வழியிலோ தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கொள்கையை பாரதீய ஜனதா கையில் எடுத்து உள்ளது. பாரதீய ஜனதா தன்னுடைய கொள்கையை முன்னெடுத்து செல்கிறது என்பது காங்கிரஸ் பெருமைப்பட வேண்டும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தலில் பெருமளவு வெற்றியை தனதாக்கிய போது, சிவசேனா தலைவர் பால் தாக்கரே அவருடைய வெற்றி குறித்து கேள்வியை எழுப்பினார். இந்திராவால் பெற்ற வெற்றி கிடையாது, மையால் கிடைத்த வெற்றி என்றார். இப்போது மையை பயன்படுத்தும் முறையானது கிடையாது. ஆனால் பாரதீய ஜனதா தேர்தல்களில் வெற்றிப்பெற வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது, இப்போது உள்ள தேர்தல் முறையில் இனியும் மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்களுடைய முகமூடிதான் மாறிஉள்ளது, ஆனால் அதற்கு பின்னால் இருப்பவர்களின் முகமானது அப்படியே இருக்கிறது.

காங்கிரஸை பாரதீய ஜனதா தோற்கடிக்கவில்லை, ஆனால் மோசடியில் அதனுடன் இணைந்து உள்ளது,” என சிவசேனா தெரிவித்து உள்ளது.

-dailythanthi.com

TAGS: