பிறப்பும் இறப்பும் வெட்ட வெளியில் நாடோடி மக்களின் வாழ்க்கை நிலையின் பரிதாபம்

தாசரிகள், மணியாட்டிகாரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல் வேஷக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குரவர்கள் என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் நாடோடிகளின் வாழ்க்கை நாதியற்று வீதிகளில் தொடர்கிறது.

ஆம் இந்திய மக்கள் தொகையின் 7.5 சதவீதம் பேர் நாடோடிகள். தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிக  அளவில் உள்ளனர்.

ஜமீன்தார் காலத்தில் அவர்களை புகழ்ந்து ஆடிபாடி மகிழ்வித்து அன்பளிப்பு பெற்று வாழ்ந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு யாரும் கண்டு கொள்ளாததால் ஊர் ஊராக சென்று திருவிழாக்கள், மக்கள் கூடும் சந்தை, பஸ் நிலையம், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் என கம்பிகளில் நடந்தும், தீ வளையத்தில் புகுந்தும், சாட்டையால் அடித்துக் கொண்டும், திரைப்பட காதாநாயகன், நாயகி போல் வேடமிட்டு ஆடி பாடியும் தங்கள் உடலை வருத்தி வயிறு பிழைத்து வருகிறார்கள்.

இப்போது என்ன நிலை. பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதியில் தங்கியுள்ள நாடோடி மக்களான 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்தோம்.

”ஒரு இடத்தில் இருந்து கும்பலாக பலபிரிவுகளாக பிரிந்து கிளம்புவோம். மீன்பாடி வண்டியில்தான் எங்கள் மொத்த குடும்பமும் செல்வோம். ஊர் ஊராக போய் வித்தை காட்டி பிழைப்போம். இப்படியே ஆறு மாதம் போய்க் கொண்டு இருப்போம். அங்கிருந்து மீண்டும் ஆறு மாதம் ஊர் ஊராக நிகழ்ச்சி செய்துகொண்டே மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வருவோம். எல்லோரும் ஒரு இடத்தில் கூடி பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டது திருமணம் எல்லாம் அங்கேதான் நடக்கும், பிறகு மீண்டும் பயணம்.

நாங்கள் சுமார் 50 குடும்பத்தினர் இப்படி அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த காரை பகுதிக்கு வந்து டேராபோட்டு தங்கியபோது எங்கள் நிலை பார்த்து பரிதாப்பட்ட நரிக்குறவர் சங்க தலைவர் அண்ணன் காரை சுப்பிரமணியன், நாங்கள் நிரந்தரமாக தங்க ஒரு ஏக்கர் பூமியை கொடுத்ததோடு எங்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு என அடிப்படை உரிமைகளை பெற்று தர போராடி வருகிறார்.

எங்களுக்கு சொந்த வீடு என்பதை (மீன்பாடி வண்டி) இங்கு தான் பல நூற்றாண்டுக்கு பிறகு எங்களுக்கு கிடைத்தது, கிடைத்தும் புண்ணியமில்லை. அரசு தொகுப்பு வீடு பெற்றுத் தந்தார் சுப்பிரமணி. ஆனால் அதை கட்டி முடிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு தராததால் அப்படியே கிடக்கிறது. ஊர் ஊராக பிழைப்பு தேடி போனாலும் சில மாதம் தங்க சொந்த வீடு கிடைக்கும் என்ற சந்தோஷம் பூர்த்தியாகவில்லை” என்கிறார் நாடோடி இளைஞரான ராமு.

”முன்பு மாதிரி எல்லாம் வருமானம் இல்லீங்க, வீட்டுக்கு வீடு டி.வி ஆளாலுக்கு செல்போன் என நிகழ்ச்சிகளை கையிலேயே பார்க்கிறார்கள். இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. கிராமங்களில் கூட மாலை நேரங்களில் தெருவில் மக்கள் கூடுவார்கள் அப்போது வித்தை காட்டுவோம். இப்போது கிராம தெருக்களில் கூட நடமாட்டம் இல்லை. ஒரு இடத்தில் தங்கி காடுகரைகளுக்கு வேலைக்கு போய் பிழைக்கலாம் என்றால் நிரந்திர குடியிருப்பு இல்லை. இரண்டும் கெட்டான் வாழ்க்கையாக நாங்கள் அந்தரத்தில் கயிற்றில் நடப்பதுபோலவே எங்கள் வாழ்வும் உள்ளது” என்கிறார் உமா என்ற பெண்மணி.

”உடம்பில் வலு இருந்தவரை ஊர் ஊராக போய் வித்தை காட்டி பிழைத்தேன். இப்போது எனக்கு வயதாகி விட்டது. பிள்ளைகள் எல்லாம் அங்க பிழைப்பை பார்க்க போறாங்க. எனக்கு சாப்பாடு கஷ்டம். முதியோர் உதவித்தொகை கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்தேன் துரத்தியடிக்கிறார்கள். பிச்சையெடுத்தேன் அதுவும் முடியல. இரண்டு கண்ணும் தெரியல. வழிதடுமாறி பஸ்ல, கார்ல அடிபட்டு சாகும் நிலை வருது. சாவும் வரலையே” என்று குமுறுகிறார் 80 வயது பெரியவர் ராமு.

”25 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். எங்க வம்சத்தில பள்ளிக்கு போகிற முதல் தலைமுறை எங்கள் பிள்ளைகளாதான் இருக்கும். அரசு எங்களுக்கு வீடும், உதவிப்பணம் கிடைக்க செய்தால் நல்லாயிருக்கும். நாங்களும் சமுதாயத்தில் தெம்போடு வாழ அரசு உதவி செய்யனும்” என்கிறார் இளைஞர் முத்து.

இந்தியா முழுக்க 862 நாடோடி இன மக்கள் உள்ளனர். இவர்கள் எந்த பட்டியலிலும் இடம்பெறவில்லை. அரசின் அடிப்படை சான்றுகள் கூட கிடைக்காமல் வாழ்கின்றார்கள். காரை பகுதியில் உள்ள சில குடும்பங்கள் நாடோடி வாழ்க்கையை துரந்து நாகரீக வாழ்க்கை வர முயன்றாலும் கூட, அரசு அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள். இவர்களுக்கு என ஒரு நலத்துறையை உருவாக்கி உதவினால் பலர் திறமை சாலிகளாக ஜொலிப்பார்கள். வயிற்றுப் பிழைப்புக்காக இவர்களின் ஆட்டம், ஓட்டம் சில சில்லரைகளோடு கல்லறையில் முடிவதை அரசு தடுத்து காப்பற்ற வேண்டும். செய்யுமா????…

-nakkheeran.in

TAGS: