இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வை வழங்குமாறு ஐ.நா. சபை அழுத்தம் கொடுக்கவேண்டும்!

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே மோதல் மூண்டுள்ளதால் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அரசின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்குள் தீர்வை அடைந்துவிடமுடியுமா என்பதும் சந்தேகமே என்றும், எனவே, ஐ.நா. சபையும், அனைத்துலக சமூகமும் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையீடுசெய்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிச் சபாநாயகருமான செல்வம் அடைக்காலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது.,

“ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக எதுவும் கூறப்படாதது கவலையளிக்கின்றது. மாகாண சபை முறைமை பற்றி பேசப்பட்டிருந்தாலும் இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை.

இனப்பிரச்சினையொன்று இருக்கின்றது என்பதையே அவரின் உரை எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரச்சினை பற்றி மட்டும் பேசுவதில் அர்த்தமில்லை. இந்த உரையின் ஊடாக எதைக் கூற முற்படுகின்றார்கள் என்றும் புரியவில்லை.

அரசியல் சாசன சபை கூடாமல் உள்ளது. புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானதும் அது கூடுமென எதிர்பார்க்கப்பட்டாலும் அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது.

இந்த அரசு எதையும் செய்யவில்லை எனக் கூறவில்லை. சிறுசிறு விடயங்கள் நடந்துள்ளன. எனினும், காணிகள் முழுமையாக விடுக்கப்படவில்லை. இது உண்மை.

காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இன்னும் இரண்டு வருடங்கள் சென்ற பின்னர்தான் அவை விடுவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது.

இழுபறிக்கு மத்தியில் காணாமல்போனோர் அழுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. காணாமல்போன பலர், சாட்சிகள் சகிதம் கண்முன்னே ஒப்படைக்கப்பட்டனர். எனவே, பொறுப்புக்கூறவேண்டியவர்களை விசாரிப்பதற்கு இந்த அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக, இதுவும் ஐ.நாவை சமாதானப்படுத்தும் திட்டமாக இருந்துவிடக்கூடாது.

தேசிய அரசுக்கு பல கட்சிகள் ஆதரவளித்தன. ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தற்போது பிரச்சினை மூண்டுள்ளது. நடவடிக்கைகளில் அது தெரியாவிட்டாலும், ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. எனவே, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. எஞ்சிய இரண்டு வருடங்களில் தீர்வு காணப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டது. வெளியிலிருந்து அரசை ஆதரித்தோம். அரசுடன் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் சக்திகள் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றன. இதை மக்களும் ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இதைக் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் ஆட்சிமாற்றத்துக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிய ஐ.நாவின் பிரேரணைகளைக் கொண்டுவந்த சர்வதேச சமூகம், இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். ஐ.நாவும் சர்வதேச சமூகமும் தனது பொறுப்பிலிருந்து விடுபடக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: