இளையராஜாவின் வழக்கறிஞர் போலீசில் புகார்: அனுமதியின்றி சிடிக்கள் வெளியிடுவதாக குற்றச்சாட்டு

கோவை: இளையராஜா இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியின்றி சி.டி.க்களாக வெளியிட்டு வரும் தனியார் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இளையராஜாவின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

கோவை ஆடீஸ் வீதியில் “ஹனி பீ மியூசிக்” என்ற இசைதட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை சி.டி.யாகவும் இணையதளத்திலும் அனுமதியின்றி வெளியிடுவதாக கூறப்படுகிறது. மேலும் வேறு வேறு இசைகளை, இளையராஜாவின் இசையுடன் புகுத்தி (DTS format) வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது.

இதனால் இசை உலகில் இளையராஜாவிற்குள்ள நற்பெயர் கெட்டு வருவதாக, இளையராஜாவின் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் சிவசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தனியார் இசைத்தட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றினையும் அளித்தார்.

இதில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இசைத்தட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு முரணாக சி.டி வெளியிட்டு சம்பாதித்த பணத்தை வைத்திருக்கும் அந்நிறுவன உரிமையாளர்கள் வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளையராஜா பெயரை பயன்படுத்தி அவர் சம்பாதித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிமையாளர் அந்தோனி முத்துசாமியையும் கைது செய்யுமாறு அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com