வடகொரிய அணு சோதனை மையம் இரு வாரங்களில் அகற்றப்படுகிறது

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், இன்னும் இரண்டு வாரத்துக்குள் தனது அணு சோதனை மையத்தை அகற்றும் பணியைத் தொடங்க இருப்பதாக வடகொரியா கூறியுள்ளது.

இம் மாதம் 23 மற்றும் 25 தேதிகளுக்கிடையே தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

அந்த சோதனை மையம் பாதியளவு சீர்குலைந்து போயிருக்கும் என்று முன்னதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் நேருக்கு நேர் சந்திப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இருதலைவர்களும் ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து நேரடியாகப் பேசுவார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அணு சோதனை மையத்தை மே மாதம் அகற்றத் துவங்குவதாகவும், அப்போது தென்கொரிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிம் ஜோங்-உன் கூறியதாக ஏப்ரல் மாதம் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதிபர் கிம் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தனர்.

ஆனால், சனிக்கிழமை வடகொரியா வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு விஞ்ஞானிகளை அந்த மையத்துக்கு அனுமதிப்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

அணு சோதனை மையத்தை அகற்றுவது எப்படி?

பருவ நிலையைப் பொருத்து, அணு சோதனை மையத்தை அகற்றும் பணி நடைபெறும். முதலில், அனைத்து சுரங்கப் பாதைகளும் வெடிவைத்துத் தகர்க்கப்படும். பிறகு, கண்காணிப்பு மையங்கள், ஆராய்ச்சி கட்டடங்கள் மற்றும் பாதுகாப்பு சாவடிகள் அகற்றப்படும்.

தென்கொரியா, சீனா, அமெரிக்கா, வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

வடக்கு அணு சோதனை மையம் அகற்றப்படுவதை உள்ளூர் ஊடகங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு ஊடகப்பிரதிநிதிகளும் நேரில் பார்ப்பதையும், அது எவ்வாறு நடக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிக்குள் இருப்பதால் அணு சோதனை மையத்தை அகற்றும் பணியை நேரில் பார்வையிட அழைக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிதாக இருக்கும் என்று வடகொரிய அதிகாரிகள் காரணம் தெரிவித்துள்ளனர்.

அணு சோதனை மையத்தைப் பற்றி என்ன தெரியும்?

புங்யே-ரி பகுதியில், அதாவது வடகொரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மன்டப் மலைப்பகுதியில் இந்த மையம் உள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் அந்த மையத்தில் 6 முறை அணு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடைபெற்றது. -BBC_Tamil