பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேர் மீட்பு

கடலூர்: பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை அருகில் உள்ள ராசாப்பாளையத்தில் சீனிவாச ரெட்டியார் என்பவருடைய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 17 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக பண்ருட்டி தாசில்தார் பூபாலசந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அதிகாரிகள் குழு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தோட்டத்தில் சிலர் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த லட்சுமி, அவரது கணவர் வெங்கடேசன் உள்பட 17 பேரை மீட்டு கடலூருக்கு அழைத்து வந்தனர். அதில் 6 பெண் குழந்தைகளும், 5 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அந்த 11 குழந்தைகளை குழந்தைகள் நல குழும தலைவி ஜெயந்தி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

அந்த குழந்தைகளில் ஆண் குழந்தைகளை செம்மண்டலம் காந்தி நகரில் உள்ள ஆண் குழந்தைகள் காப்பகத்திலும், பெண் குழந்தைகளை வன்னியர் பாளையம் காமராஜர் நகரில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைத்தனர். இந்த 17 பேரும் விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி அருகே உள்ள முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சீனிவாச செட்டியார் மற்றும் இவர்களை மேற்பார்வை பார்த்து வந்த செந்தில் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: