சபாவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் புது முதல்வர் மூசா அமானின் பதவி கேள்விக்குறி

14-ஆவது பொதுத் தேர்தல் முடிவு வெளிவரத் தொடங்கியது முதலே சபா மாநில அரசியலில் அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து இடம்பெற்று வருகின்றன. இப்பொழுது தேசிய முன்னணியின் டான்ஸ்ரீ மூசா அமான் முதல் அமைச்சராக அவசர அவசரமாக பதவி ஏற்ற அடுத்த நாளே நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ளார்.

 

60 இடங்களைக் கொண்ட சபா மாநிலத்தில் 29 இடங்களை வென்ற தேசிய முன்னணி சார்பில் மாநில மறுமலர்ச்சிக் கட்சியின்(ஸ்டார் சபா) இரு உறுப்பினர்களின் ஆதரவோடு மே 10-ஆம் நாள் பிற்பொழுதில் அவசர அவசரமாக மூசா அமான் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

 

அடுத்த நாளே தேசிய முன்னணியின் இரு உறுப்பினர்கள் மாநிலக் கட்சியான சபா வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சாஃபி அப்டாலைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக மே 10- ஆம் நாள் காலையில் 21 இடங்களை வென்ற வாரிசான் கட்சி ஆட்சி அமைக்க முயன்றது. ஜசெக-வின் ஆறு இடங்கள், மக்கள் நீதிக் கட்சியின் இரு உறுப்பினர்கள், டத்தோ டாக்டர் ஜெஃப்ரி கெட்டிங்கான் தலைமையிலான் ஸ்டார் சபா கட்சியின் இரு உறுப்பினர்கள் என 31 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநில ஆளுநரைச் சந்திக்கச் சென்ற ஷாஃபி அப்டாலும் ஆதரவாளர்களும் ஆளுநர் மாளிகை வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதுடன் திரும்பிச் செல்லும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

 

குழப்பம் நீடித்த நிலையில் கெட்டிங்கான் திடீரென்று தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் மூசா அமான் முதல்வராக பதவி ஏற்றார்.

 

ஆனாலும், வாரிசான் கட்சியும் மாநில நம்பிக்கைக் கூட்டணியும் இதே ஏற்றுக் கொள்ளவில்லை; இப்படிப்பட்ட நிலையில்தான் மூசா பதவி ஏற்று 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவர் அணியைச் சேர்ந்த இருவர் வாரிசான் & நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் தாவியுள்ளனர்.

 

உண்மையில், தேர்தல் நடந்த அன்று முடிவுகள் வெளியான பொழுது, வாரிசான் கட்சி 35 இடங்களை வென்றதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் தெரிவித்தன. அப்படி வாரிசான் வென்ற சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வாரிசானின் எண்ணிக்கை 29 ஆக குறைந்தது.

 

இப்படி தொடக்கத்தில் இருந்தே குழப்பமும் ஆள் அணிமாறாட்டமும் இடம்பெற்று வரும் சபா மாநில அரசியலிலும் அரசாங்கத்திலும் அடுத்து என்ன என்ற ஆவல் தேசிய அளவில் பிரதிபலிக்கிறது.