காவிரி: மத்திய அரசு தாக்கல் செய்த வரைவில் தமிழகத்திற்கு துரோகம்.. அணை கட்டுப்பாடு கர்நாடகாவுக்குதான்

டெல்லி: காவிரி வரைவு திட்டத்தில் தமிழகத்திற்கு பாதகமான சில அம்சங்கள் உள்ளன.   powered by Rubicon Project காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது.

மத்திய அரசின் இழுபறிகளுக்கு பிறகு, மே 14ம் தேதி காவிரி வரைவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது. அதன்படி, இன்று மத்திய அரசு சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

இதில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும் என கூறப்படவில்லை. வாரியமோ, ஆணையமோ அல்லது குழுவோ இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் என மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இதில் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்கள்:

மாநில கட்டுப்பாடாம்

மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும், காவிரி அமைப்பு மேற்பார்வை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் என்று நீர்வளத்துறை செயலர் என்று யு.பி.சிங் கூறியுள்ளார். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு. உச்சநீதிமன்றம் கூறியே அணைகளை திறக்காத கர்நாடகாவா, புதிதாக உருவாக்கப்படும் அமைப்பு கூறி அணைகளை திறக்கும்?

கெஞ்சல் தொடரும்

காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்று அமைக்கப்பட்டிருந்தால், அணைகளின் முழு கட்டுப்பாட்டையும் அந்த அமைப்பே எடுத்துக்கொள்ளும். அப்போது தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் திறந்திருக்க முடியும். இப்போது மீண்டும் தண்ணீர் தேவை என்றால் கர்நாடகாவிடம்தான் கெஞ்ச வேண்டியிருக்கும். அவர்களுக்கு போக எஞ்சியதை வழக்கம்போல தமிழகத்திற்கு அளிப்பார்கள்.

கர்நாடகாவிற்கா காவிரி

காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் அமையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. காவிரியின் கடைமடை பகுதியான தமிழகத்திற்குத்தான் அந்த நதியில் அதிக உரிமை உள்ளது. திருச்சியிலோ, தஞ்சையிலோ ஏன், சென்னையிலோதான் தலைமையகத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால் பெங்களூரில் காவிரி அமைப்பை அமைத்துள்ளதன் மூலம், உளவியல் மற்றும் பூகோள ரீதியாக காவிரி கர்நாடகாவிற்கு சொந்தம் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கைப்பாவை

உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர். இவர்கள் தேவைப்படும்போது, வாக்களித்து தண்ணீர் திறப்பு பற்றி முடிவு செய்வார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கேட்டு செயல்படும் வகையிலும் அந்த அமைப்பு இருக்கும். எனவே இனிமேல் கர்நாடகாவிடம் மட்டுமின்றி மத்திய அரசிடமும் தமிழகம் கெஞ்சி தண்ணீர் பெறும் நிலைதான் இருக்கும்.

பல் இல்லா அமைப்பு

மொத்தத்தில், இந்த வரைவு அறிக்கை என்பது, இயல்பாக தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் பெறும் உரிமையை ஏதோ, தமிழகம் கெஞ்சி கேட்கும் நிலைக்குதான் வைத்துள்ளது. இப்போதும் அதே நிலைதான் உள்ளது என்பதற்காகத்தான் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசு கோரிக்கையாக இருந்தது. ஆனால், பல் இல்லாத அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால், கர்நாடகாவிற்கே இதனால் மெத்த லாபம்.

tamil.oneindia.com

TAGS: