உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்

முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும்.

உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’.

தமிழ் இனத்தினது விடுதலை வேண்டி, மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற, அகிலமே ஆச்சரியப்பட்ட வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம், நிசப்தமான மண் அது. ஆயிரமாயிரம் தமிழ் ஆத்மாக்கள், கணக்கற்ற கனவுகளுடன் மீளாத் துயில் கொள்ளும் பூமியது.

மறைந்துபோன தமது உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காகவும் தங்களது மன அமைதிக்காகவும் ஆத்ம சாந்தி வழிபாடுகளை அனுஷ்டிப்பது தமிழ் மக்களின் நம்பிக்கை – பாரம்பரியம். உயிர்நீத்த உறவுகளை எண்ணி, விழிகளில் திரளும் கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கை ஆக்கி, அவர்களை நினைவுகூர்ந்து, ஆத்மா சாந்தியடையத் துதிக்கும் உயரிய சடங்குகளுடன் கூடிய வழிபாட்டு முறை எனலாம்.

இது, இழப்புகள் மூலம் ஏற்படும் துக்கங்களுக்கு, சுயபரிகாரம் தேடும் ஒரு பாரம்பரிய உளவளத் துணைச் செயற்பாடு ஆகும். ஆயிரம் வலிகளைப் போக்குவதற்கான ஆன்மிக நெறிசார்ந்த பாதை ஆகும்.

அந்த வகையில், இலங்கையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும், தங்களது என்றுமே நினைவு அழியாத உறவுகளை நினைத்து, அவர்களைத் தங்கள் மனக் கோவிலில் இருத்தி, அவர்களது கனவுகள் மெய்ப்பட வேண்டும் என வழிபடும் ஒரு  நாளே ‘மே 18’ ஆகும். தீராத துயர்களையும்  காயாத காயங்களையும் இழந்த உறவுகளையும் நினைவில் சுமக்கும் ஒரு கனத்த நாள்.

இவ்வாறான நினைவுகூரும் நாளை, அனுஷ்டிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்ட சமூகமாகவே, கடந்த காலங்களில், தமிழ் மக்கள் இருந்துள்ளமையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதன் பிறிதோர் அங்கமாக, அவர்களது நினைவுகளைச் சுமந்து, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒன்றியத்தால் கட்டப்பட்டு வரும் நினைவுதூபியின் வேலைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை இடித்தழிப்பதற்கும் கொழும்பு முயன்று வருகின்றது. இது, முள்ளிவாய்க்கால் போரில் சிக்கி மரணித்த மக்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம் மட்டுமே ஆகும்.

இறந்த மக்களை நினைவுகூரும் எண்ணம் கூட வராமல், வெறும் ஜடங்களாக-நடைப்பிணங்களாகத்தான் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் போலும்.

அந்தத் தூபி, முள்ளிவாய்க்காலில் அநியாயமாகவும் அநாதரவாகவும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான, தெளிவானதும் பலமானதுமான நீடித்து நிலைத்துநிற்கும் வரலாற்று ஆவணமாக அமையும். அது தமிழ் மக்களின் உயர் கல்வி வளாகத்தின் நடுவே அமைந்து, பெரும் இடைஞ்சல் தரலாம் என நல்லாட்சி நடுங்குகின்றது.

ஆக மொத்தத்தில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது ஆக்கச் சின்னங்களுக்கும் இடமில்லை. தமிழ் மக்களின் பேரழிவை நினைவுகூரும் சின்னங்களுக்கும் இடமில்லை என்கின்ற பரிதாப நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவல நினைவு நாளுக்குத் தலைமை ஏற்பது, தலையாய பிரச்சினையாக மாறி விட்டது. கொடூர போரில் தொலைந்த சொந்தங்களை நினைத்துக் கதறும் நிகழ்வில், “தலைமை வேண்டும்” என அடம் பிடிப்பது, ஆரோக்கியமான செல்நெறியாகத் தோன்றவில்லை.

தகுதியான தலைமை இன்றித் தமிழ் மக்கள் தடுமாறிக் கொண்டு இருக்கும் தறுவாயில், ஏற்கெனவே உள்ள முரண்பாடுகளும் முறுகல்களும் போதாதென்று மேலும் முரண்பாடுகளை எமக்குள் வளர்த்து, எதிரிக்கு அமோக அரசியல் அறுவடைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றோமோ எனத் தமிழ் மக்கள், ஏக்கப் பெரு மூச்சு விடுகின்றனர்.

எண்ணிக்கையில் சிறிய இனமான இலங்கைத் தமிழ் இனத்துக்குள், அதிகரித்த எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளும் பிரதேச பிரிவினைகளும் மாறுபட்ட கருத்துகளும் உருவெடுப்பது, தமிழ் மக்களின் சாபக்கேடு என்றே கூறவேண்டும்.

கடந்த காலங்களில் சில குறை நிறைகளுக்கு மத்தியிலும், இந்த நினைவேந்தலை வடக்கு மாகாண சபை முன்னெடுத்து வந்துள்ளது. ‘முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை’ எனவும் ‘மே 18 தமிழின அழிப்பு நாள்’ எனவும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழகம், சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து முள்ளிவாய்க்காலில் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவது வரவேற்கத்தக்கதாகும்.

கடந்த காலங்களிலும் ‘பொங்கு தமிழ்’ உட்பட, தமிழர் அரசியல் சார்ந்த பல நடவடிக்கைகளை யாழ். பல்கலைக்கழகம் முன்னெடுத்திருந்தது. தமிழ் மக்கள் மத்தியிலும் அதனது வகிபாகமும் செல்வாக்கும் வலுவாக உள்ளது.

அதற்காக எவருமே, முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் பங்கு கேட்க முடியாது; உரிமையும் கோர முடியாது. மாறாக, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கு உரித்துடையவர்களே; தலைமை தாங்கவும் தகுதியானவர்களே.

மண்ணோடு மடிந்த தமது சொந்தங்களை  நினைத்து, அவர்களது எண்ணங்கள் நிதர்சனமாக வேண்டும் என்ற நோக்கம் கொண்ட மகத்தான நாளுக்கு யார் தலைமை ஏற்பது என்பது முக்கியமல்ல. ஆனால், விண்ணில் வாழும் அவர்களது இலட்சியங்களை அடைய, மண்ணில் வாழும் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதே கவனிக்க வேண்டிய விடயம் ஆகும்.

ஆகக் குறைந்த பட்சம், முள்ளிவாய்க்காலில் கூட நினைவு ஆலயம் ஒன்றைக் கட்ட முடியாத நிலையில் உள்ளோம். கடந்த ஒன்பது வருடத்தில், தமிழர் சார்ந்து, எந்த விதமான அரசியல் காரியங்களும் உருப்படியாக உருப் பெறவில்லை. வழமை போன்று, வெறுமனே சிங்கள அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளுடனும் பன்னாடுகளின் பயனற்ற வார்த்தை ஜாலங்களுடனும் இலக்கு இல்லாது நகருகின்றது, தமிழர்களது அரசியலும் வாழ்வியலும்.

ஆகவே, இவ்வாறான ஒரு நிலையில், தமிழ் இனம் இனி என்ன செய்யப் போகின்றது? 4,500 வருட காலப் பாரம்பரியத்தைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ் இனத்தின் இருப்பு, இன்று தாய் மண்ணில், கேள்விக் குறியாக்கப்பட்டு வருகிறது.

‘கடலில் மழைத் துளி கலந்தால் காணாமல் போவது போல’ தாய் மண்ணிலேயே தமிழ் இனம் காணாமல் போய் விடுமோ எனக் கவலையோடு, முகவரி இழந்த மக்களாகப் பல கேள்விகளுடன் தமிழர்கள் நடைப்பிணங்களாக வாழ்கிறார்கள். வாழ்க்கையே போராட்டம் என்ற நிலை மாறி, போராட்டமே வாழ்க்கையாகி  விட்டது.

ஆகவே, ‘முள்ளிவாய்க்கால் நினைவுதினம்’ வெறுமனே ஒன்று கூடி ஒப்பாரி பாடும் இடமல்ல. அனைவரும் ஒன்று கூடி, இந்த நாட்டில் தாம் வாழுவதற்கான உரிமைச் சபதம் செய்யும் ஒரு தினமாகும். இது தமிழ் மக்களது துக்க தினம் இல்லை. தமிழ் மக்களை அவர்களது உரிமையின் பொருட்டு வீச்சுடன் இழுத்துச் செல்லும் எழுச்சி தினம் ஆகும். அங்கு சுடர் விட்டு எரியப் போகும் தீபச்சுடருடன், தமிழ் மக்களது மனதில் பொங்கித் தணல் போல தகிக்கும் உரிமைத் தீயும் சேர்ந்து கொள்ளட்டும்.

‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்தி, ஆயுதப் போராட்டத்துக்கு முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைத்தார்கள். நாளாந்தம் அப்பாவி மனிதங்களை கொன்று குவித்த போருக்கு, அப்பாவி மக்களை விடுவிக்கும் போராட்டம் என பெயரிட்டனர்.

அந்த மண்ணில், உண்மையில், நடைபெற்றது தமிழ் மக்களது விடுதலை வேண்டி, பல தசாப்தகால விடுதலைப் போராட்டம் என உலகத்துக்கு உரத்துக் கூறப்பட வேண்டும். இது நன்கு தெரிந்தும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்துடன் தங்களது அரசியல், இராணுவ பொருளாதார சுயநலன் மட்டும் கருதி, துணை போன நாடுகளுக்கு, தமிழர்களின் உள்ளத்து உணர்வுகள்  உறுதியாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.

எல்லோருக்கும் பொதுவான பூமிப்பந்தில், தாங்களும் கௌரவமாகவும் தனித்துவமாகவும் சுதந்திரமாகவும் வாழவே  தமிழ் மக்கள் விரும்பினர். சுதந்திரம் இல்லாத தேசம், உயிர் இல்லாத உடம்பைப் போல பயனற்ற ஒன்றே.

இலக்குகளை நோக்கி ஓட வேண்டும்; முடியாவிடில் நடக்க வேண்டும்.; முடியாவிடில் தவழ்ந்தாவது போக வேண்டும். ஏனெனில் உயர்ந்த இலக்குகளை நோக்கிய பயணம் மடிவதில்லை; முடிவதுமில்லை. இது ஒரு தனி நபருக்கும் பொருந்தும். ஓர் இனத்துக்கும் பொருந்தும்.

ஆகவே, தாயக மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் என இரண்டு தரப்புகளும் ஒன்று சேர்ந்து, விவேகத்துடன் பயணிக்க வேண்டும்.

(காரை துர்க்கா)

-tamilmirror.lk

TAGS: