சந்தேகத்திற்குரிய பழமைவாதிகள் சீர்திருத்த திட்டத்தைத் தடம்புரளச் செய்ய முடியாது, அன்வார் கூறுகிறார்

 

“சந்தேகத்திற்குரிய நபர்களால்” சீர்திருத்தத் திட்டத்தைத் தடம்புரளச் செய்ய முடியாது என்று அன்வார் இப்ராகிம் அவரது ஆதரவாளர்களுக்கு உறுதி அளித்தார்.

சீர்திருத்தத் திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று பலர் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு வலிவான ஆதரவு இருப்பதை நான் குறைந்தபட்சம் கடந்த வாரத்தில் கண்டேன் என்று அன்வார் கூறினார்.

இது சம்பந்தப்பட்ட தனிமனிதர்கள் பற்றியதல்ல; எப்படி சில சந்தேகத்திற்குரிய பழமைவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதல்ல.

அவர்கள் திட்டத்தை தீர்மானிப்பவர்களல்லர். சீர்திருத்தத் திட்டம் தடம்புரளாமல் இருப்பதை நாம் உறுதி செய்வோம் என்று கோலாலம்பூரில் இன்று அவரது வீட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.

இந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் யார் என்று அன்வார் கூறவில்லை.

சிலர் இதையும் அதையும் கூறுவதற்கு ஏன் அனுமதிக்கப்படனர் என்று பிகேஆரில் பலர் கேட்கின்றனர் என்றும் அன்வார் தெரிவித்தார்.

நாம் “அம்னோ அல்ல”. நாம் சில கருத்து வேறுபாடுகளை அனுமதிக்கிறோம் என்று கூறிய அன்வார், தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் நாம் முக்கியமான பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றார்.

அவர் பிரதமராக இருப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அன்வார் இவ்வாறு கூறினார்.

மேலும், “இது அரசியல்”; என்று கூறிய அன்வார், ஜனநாயகத்தில் முழு ஆதரவு கிடைக்கும் என்பது பற்றி தாம் முற்றிலும் நிச்சயமாக இருக்க முடியாது என்றாரவர்.

தற்போதைய பிரதமர் மகாதிரிடமிருந்து பதவியை ஏற்று நாட்டின் எட்டாவது பிரதமராக அன்வார் நியமிக்கப்படுவார் என்று பக்கத்தான் ஹரப்பான் அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளது.