மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்

மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டுமென பி.கே. குமார் கோரிக்கை 

மலேசியாவில் நடந்து முடிந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 200 கூட்டங்களில் பேசியது போல இது மலேசியர்களின் சுனாமி. ஒட்டுமொத்த நவீன தகவல் சாதனங்கள் வழி இளைஞர்களின் மறுமலர்ச்சி.

ஓர் அரசியல் மாற்றத்தை விவேகமாகவும், அறிவுப்பூர்வமாகவும் சனநாயகரிதியாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது இந்நாட்டில் நடக்குமா..? என சந்தேகித்தவர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் இளைஞர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வெற்றி பெற்றுள்ள அனைத்து பாக்காத்தான் அரப்பான் வேட்பாளர்களுக்கும்  வாழ்த்துக்கள்.

மிக சிறந்த அனுபவமும், ஆற்றலும், திறமையும் மற்றும் தூரநோக்குச் சிந்தனையும் கொண்ட துன் மகாதீர் அவர்கள் கரங்களில் பிரதமர் பதவி ஒப்படைக்கப் பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான மலேசியாவில் இருப்பதாக உணருகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள அனைத்தையும் விரைவில் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவார்கள் என மலேசியர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

92 சதவீத சீனர்களும் 85 சதவீத இந்தியர்களும்  (தமிழர்கள்) பாகாத்தான் அரப்பானுக்கு வாக்களித்து ஆட்சியில் அமருவதை உறுதி செய்திருக்கிறார்கள். இனம் பிரித்து காட்டுவது நமது நோக்கமல்லா விட்டாலும் கூட  உண்மையைச் சொல்வதில் தவறில்லை. மலாய்க்காரர்களின் வாக்குகள் பாசு, அம்னோ, அமானா, அடிலான் என்று பிரிந்து சென்றிருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.

இனப்பாகுபாடற்ற ஓர் அரசாங்கம் மலேசியர்களை பிரதிநித்து ஒரு முழுமையான அமைச்சர்கள் துன் மகாதீர் தலைமைத்துவத்தில் அமையவிருக்கிறது. துன் மகாதீர் அவர்களும் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

இந்தியர்களைப் பொருத்தவரையில் கடந்த காலங்களை போல இல்லாமல் வாக்களித்த இந்திய வாக்காளர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகதவகையில், முழு அமைச்சர் துணை அமைச்சர் பதவிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அரசு சார்பற்ற இயக்கங்கள், பொது நிலையாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

மலேசியா இளைய தலைமுறையினர் ஆட்சி மாற்றத்தின் வழி தங்களுக்குறிய இடங்கள், எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும் கருதுகின்றனர்.

22 ஆண்டுகால பிரதமர் பதவி வகித்துள்ள துன் மகாதீர் அவர்களுக்கு மக்களின் நாடித்துடிப்பு நன்கு தெரியும். மாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதில் நிச்சயம் சிரமமிருக்காது.

40-க்கும் மேற்பட்ட அரசுத் துறை தலைமை பொறுப்புகளில் இன நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மலேசியர்கள் என்ற பார்வையில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்புகள் பெறுவதை பாக்காத்தான் அரப்பான் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் பெற்றுள்ள நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என சமூக ஆர்வலரும் மக்கட்செல்வர் பி.கே. குமார் கூறினார்.

பேராக் மாநிலத்தில் புதிய முதல்வராக மாண்புமிகு பயிசால் அசுமு (Faizal Azumu) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பேராக் மாநிலத்தில் அமையப்போகும் ஆட்சி குழுவில் தங்கள் பிரதிநிதித்துவமும், சபாநாயகர் பதவி விட்டுப்போகாமல் இருக்க வேண்டுமெனவும் இந்திய வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். அதனைப் பேராக் மாநில முதல்வர் நிறைவு செய்து வைப்பார் என தாம் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக பி.கே. குமார் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல அனைத்து மாநிலங்களிலும் இந்தியர்கள்  (தமிழர்கள்) பிரதிநிதித்துவம் இருப்பதை மாநில அரசாங்கங்களும் உறுதி செய்ய வேண்டுமென தாம் இந்திய வாக்காளர்கள் சார்பாக கேட்டு கொள்வதாக திரு. பி.கே. குமார் தெரிவித்தார்.