என்கவுண்டர் தொடங்கிவிட்டது.. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பாஜக பற்றி பிரகாஷ்ராஜ் டிவிட்

பெங்களூர்: கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது, சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார்.

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் தற்போது நடக்கும் அரசியல் கூத்து குறித்து டிவிட் செய்துள்ளார். பாஜக மிகவும் மோசமான அரசியல் செய்ய தொடங்கிவிட்டது, அதை சந்தோசமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.

அதில் ”கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது. இனி எந்த மக்கள் பிரச்சனை சிக்குகிறார்கள் என்ற அந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்எல்ஏக்கள் எங்கே செல்கிறார்கள், எந்த சொகுசு விடுதியில் எந்த எம்எல்ஏ இருக்கிறார் என்ற புகைப்படம், அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக பிரேக்கிங் செய்திகள் வரப்போகிறது. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று வருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

tamil.oneindia.com