கடலூரில் தண்ணீர் பஞ்சத்தால் கழிவு நீரில் விவசாயம் செய்யும் அவலம்!- விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மின்விசை பம்புகள், கை பம்புகள் என்று அனைத்தும் இருந்தும் பலவித காரணங்களால் செயல்படாமல் உள்ளன. பழுதடைந்த மின் மோட்டார்களை உடனடியாக சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதால் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வருதல், சைக்கிள்களில் தண்ணீர் கொண்டு வருதல், வயல்வெளிகளில் தண்ணீர் தேடுதல் என மக்களின் பாடு துயரம்தான்.

மேலும் நகரம் மற்றும் கிராமப்புறங்க்களிலும் ஹோட்டல்கள், லாட்ஜ்கள், பெரிய நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இவற்றை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதுபோன்று அதிகாரிகளின் அலட்சிய போக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணம்.

இது ஒரு பக்கம் இருக்க விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளில் மணிமுக்தாறு, வெள்ளாற்றில் மணல் அள்ளுதல், என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் ராட்சத மோட்டர்கள் மூலம் நீரை உறிஞ்சுதல், மழை நீரை சேமிக்க ஏரி, குளங்களை தூர்வராமல் இருத்தல், பருவமழை இல்லாமல் பொய்த்து போதல் போன்ற பல்வேறு காரணங்களினால் நிலத்தடி நீர் மட்டமாகி 500 அடிக்கு கீழ் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டின் உச்சகட்டமாக குடிநீருக்காக அதிக தூரம் சென்று சுடுகாட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் மோட்டாரில் தண்ணீர் எடுக்கும் நிலை விருத்தாசலம் அருகே உச்சிமேடு கிராமத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் விருத்தாசலம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் நகர மக்கள் பயன்படுத்தும் கழிவுநீரை தடுத்து திருப்பி சுமார் 10 ஏக்கருக்கு மேல் வயலுக்கு பயன்படுத்தி விவசாயம் செய்யும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் சாலைமறியல், அரசு – ஊராட்சி அலுவலகங்கள் முற்றுகை போன்ற பலவித போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அப்போது அவர்களை கலைந்து செல்வதற்காக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரசம் செய்கிறார்களே தவிர குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கபடவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
water

அதேசமயம் குடிநீர் பஞ்சம் குறித்து ஒன்றிய, நகராட்சி, பேரூரட்சி அளவில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளதிலிருந்தே குடிநீர் தட்டுப்பாட்டின் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஆனால் போராடும் மக்களின் குடிநீர் பிரச்சினைகளையே தீர்த்து வைக்காத அதிகாரிகள் போனில் சொன்னால் மட்டும் தீர்த்து வைத்து விடுவார்களா… என மக்கள் கேட்கின்றனர்.

எனவே அரசு அதிகாரிகள் உண்மையிலேயே அக்கறை செலுத்தி, குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும், குடிநீர் திருட்டை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும், மழை நீரை சேமிக்க ஏரி, குளங்களை தூர் வார வேண்டும், ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியும் தண்ணீர் தட்டுப்பாடின்றி வாழ முடியும்.

-nakkheeran.in

TAGS: