மகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமதை அவதூறாகப் பேசினார் என்பதற்காக, காவல்துறையினர் ஒருவரை இன்று கைது செய்தனர்.

‘மகாதிர் மற்றும் இஸ்லாத்தை அவமதித்துள்ளார்’ என அதிருப்த்தி அடைந்த சில அரசு சாரா நிறுவனங்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்நபரைக் கைது செய்ததாக லங்காவி போலிஸ் தலைமையகம் முகநூல் வழி கூறியுள்ளது.

விசாரணைக்கு உதவும் வகையில், அந்தச் சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைக்கப்படவுள்ளார்.

இதற்கிடையே, மலேசிய சோசலிசக் கட்சியைச் சேர்ந்த காலித் இஸ்மாத் தனது டுவிட்டரில் இத்தடுப்புக் காவலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சர்வாதிகாரி என்று ஒருவரை அழைப்பது ஒரு குற்றமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பிரதமரை அவமதித்தார்’ என்ற குற்றத்தின் அடிப்படையில், போலிஸ் புகார் மற்றும் கைது நடவடிக்கை நஜிப் தலைமையில் இருந்த பாரிசான் நிர்வாகத்தில் சாதாரணமான ஒன்று.

‘லோயர்ஸ் ஃபோ லிபர்டி’ வழக்கறிஞர்கள் குழு, இத்தகைய போலிஸ் புகார்கள் ஒரு அற்பமான விஷயம் என்றும், தனிநபரின் உரிமையை இது மறுக்கிறது என்றும் கூறியுள்ளனர்.