அன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று, நஜிப் இரண்டு முறை என்னைத் தொடர்பு கொண்டார்

மே 9-ம் தேதி பொதுத் தேர்தலில், பிஎன் கடுமையான தோல்வியைச் சந்தித்தபின்னர், என்ன செய்வது என்று ஆலோசனை பெற, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அன்வார் இப்ராஹிமைத் தொடர்பு கொண்டுள்ளார்.

யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் மன்னிப்பைப் பெற்ற பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அன்வார், பொதுத் தேர்தல் (ஜிஇ) இரவன்று நஜிப்பிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்தன என்று கூறினார்.

“ஜிஇ அன்று, தொலைபேசியில் அவர் என்னை அழைத்தபோது, நான் அவரை ஒரு நண்பராக பாவித்து, தவறுகளை ஒப்புக்கொண்டு, வாழ்க்கையைத் தொடரும்படி அறிவுரை கூறினேன்,” என்று அன்வார் கோலாலம்பூரில் உள்ள தனது வீட்டில், ராய்ட்டருக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

விரைவாக ஓர் அறிக்கையை வெளியிடுமாறு, நஜிப்பைக் கேட்டுக்கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.

ஆனால், நஜிப் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, மறுநாள் நடந்த ஊடக மாநாட்டில், எந்தக் கட்சியும் அதிக பெரும்பான்மை பெறவில்லை என்றும், அரசாங்கத்தை யார் அமைப்பது என பேரரசர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

“அவர் மாறிவிட்டார், முன்னதாக ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்,” என்றார் அன்வார்.

ஆய்வாளர் அடிப் ஷால்கப்ளி, எதிர்ப்பாளரைத் தனக்கு சாதகமாக்க தூண்டுவது, தேர்தலில் வெற்றியை இழக்கும் கூட்டணிக்குச் சாதாரணமானது என்று கூறினார்.

ஜிஇ14-ல், 222 நாடளுமன்ற நாற்காலிகளில், நஜிப் தலைமையிலான பிஎன் 79-ஐ வென்ற வேளை, பிகேஆர் 50 நாற்காலிகளை வென்றது.

ஆக, இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, நஜிப் மற்றும் பிஎன் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்யும்.

கடந்தாண்டு, தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்த அன்வாரை, நஜிப் சென்று கண்டார். அதனைத் தொடர்ந்து, அந்த இரு தலைவர்களும் இணைந்து மகாதிரை எதிர்ப்பார்கள் என்ற வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.