இஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

25 மைல். அதாவது 41 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அளவுக்கு அகலமும் கொண்டு இஸ்ரேல், எகிப்து, மத்திய தரைக்கடல் ஆகியவற்றுக்கு இடையே சூழப்பட்டிருக்கும் ஓர் உறைவிடம்தான் 19 லட்சம் பேருக்கு வீடாக இருக்கிறது. அப்பகுதிதான் காஸா.

எகிப்தால் முதலில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் இப்பிராந்தியத்தை கைப்பற்றியது. 2005-ல் தனது படைகள் மற்றும் 7000 குடியேறிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது.

2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வரை இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான ஹமாஸ் ஆட்சியில், பாலத்தீன அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காஸா இருந்தது.

2006ஆண்டில் பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் வென்றது ஆனால் அதன் எதிரியான ஃபதா பிரிவுடன் கடும் வன்முறை பிளவு ஏற்பட்டது.

காஸாவை ஹமாஸ் கைப்பற்றியபோது இஸ்ரேல் காஸாவுடனான அதன் எல்லையில் சரக்குப் போக்குவரத்து மற்றும் மக்கள் உள்ளே செல்வதற்கோ வெளியே வருவதற்கோ தடைகளை விதித்தது. அதேவேளையில் காஸாவின் தென் பகுதியில் எகிப்து தடைகளை விதித்தது.

2014ஆம் ஆண்டில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

காஸா எல்லை

சுதந்திரமாக பயணம் செய்தல்

காஸாவுக்கு பயணிப்பதற்கு ஏற்கனவே குறைவான சுதந்திரம் மட்டுமே இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு மத்தியில் ரஃபா எல்லையில் எகிப்து புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. மேலும் எகிப்து – காஸா எல்லையின் கீழ் சுரங்கம் வழியாக நடந்த கடத்தல் சங்கிலி தொடர்புகளையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை துவங்கியது.

அக்டோபர் 2014ஆம் ஆண்டு முதல் எகிப்து தனது எல்லையை மூடிவிட்டது. வெகு சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே திறந்தது. மனிதநேய விவகார ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் அளித்த ஒரு அறிக்கையின்படி, ரஃபா எல்லையானது ஏப்ரல் 2018ஆம் ஆண்டு வரை 17 நாட்கள் மட்டுமே பாதியளவு திறக்கப்பட்டது. எல்லையை கடப்பதற்காக ஏற்கனவே அனுமதி கேட்டு பதிவு செய்திருந்த 23 ஆயிரம் பேருக்காக எல்லை திறக்கப்பட்டது.

2017 ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் காஸாவின் இஸ்ரேலுடனான எல்லையானது அதிகளவு திறக்கப்பட்டது; ஆனால் புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக இனி முன்னதாக தடை விதித்திருந்த போதிருந்த நிலைமையே இருக்கும்.

செப்டம்பர் 2000-த்தில் தினமும் சராசரியாக 26 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் வழியாக காஸாவை விட்டு வெளியே சென்றார்கள். அதனுடன் ஒப்பிடும்போது 2017-ன் முதல் பாதிவரை 240-க்கும் குறைவானவர்களே வெளியேறியுள்ளனர்.

சுரங்கம்

பொருளாதாரம்

1990களில் இருந்ததை விட காஸா தற்போது ஏழ்மையான நிலையில் இருக்கிறது. உலக வங்கி அறிக்கையின்படி 2017-ல் 0.5% மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. 1994-ல் 2,659 டாலர்களாக இருந்த தனி நபர் வருமானது 2018-ல் 1826 டாலர்களாக குறைந்துள்ளது.

2017-ல் காஸாவில் அதிகபட்ச வேலையின்மை விகிதம் இருந்ததாக உலக வங்கியின் வளர்ச்சி தரவுத்தளம் தெரிவிக்கிறது. மேற்கு கரையில் இருப்பதை விட இரு மடங்குக்கும் அதிகமாக, அதாவது 44 சதவீதமாக வேலையின்மை விகிதம் உள்ளது.

காஸாவில் வேலையில்லாத இளைஞர்கள் வீதம் 60% எனும் அளவுக்கு இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய தரவுகளில் மேற்கு கரையில் இருப்பதை விட இரு மடங்குக்கும் அதிகமாக, அதாவது 39% அளவுக்கு காஸாவின் ஏழ்மை நிலை இருக்கிறது. சமூக உதவித் தொகைகள் இல்லையெனில் இது இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறது உலக வங்கி.

80% மக்கள் சில வகைகளில் சமூக உதவியை பெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கல்வி

கல்வி

காஸாவில் பள்ளி கல்வி கடுமையான அழுத்தத்தில் இருக்கிறது. பாலத்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைகள் முகமையானது, 94% பள்ளிகளில் இரு ஷிஃப்ட் உள்ளன. காலையில் ஒரு பள்ளி மாணவர்களும், மாலையில் ஒரு பள்ளி மாணவர்களும் கல்வி பயில்கின்றனர் என்கிறது.

பாலத்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைகள் முகமை இப்பிராந்தியத்தில் 250 பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும் கல்வி அறிவை 97 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளது. ஐக்கிய சபையின் இயக்கத்தில் அல்லாத பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2014-ல் நடந்த மோதலில் மழலையர் பள்ளி, கல்லூரிகள், 547 பள்ளிகள் போன்றவை சேதமடைந்தன. இவற்றில் பல இன்னமும் பழுது பார்க்கப்படாமல் உள்ளன.

மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிதி அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காஸாவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையானது 2015-ல் 6.3லட்சமாக உள்ளது. இது 2013-ல் 12 லட்சமாக அதிகரிக்கும் என கணித்துள்ளது. அப்படியெனில், காஸாவில் இன்னும் 900 பள்ளிகளும், 23 ஆயிரம் ஆசிரியர்களும் தேவை.

மக்கள் தொகை

மக்கள் தொகை

உலகில் அதிக மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் காஸாவும் ஒன்று. காஸாவில் சராசரியாக ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 5,479 பேர் வாழ்கின்றனர். இது 2020-ல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 6197 பேர் என அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தசாப்தத்தின் முடிவில் அங்கு மக்கள் தொகையானது 2.2 மில்லியன் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் 2030-ல் 3.1 மில்லியனாக இருக்கக்கூடும்.

சுரங்கப்பகுதிகள் மற்றும் ராக்கெட் தாக்குதலில் இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காக 2014-ல் எல்லைகளுக்கு இடையில் ஒரு மண்டலப் பகுதியை அறிவித்தது இஸ்ரேல். இந்த மண்டலமானது, மக்களுக்கு வாழ்வதற்கும் விவசாயம் செய்வதற்கும் தேவையான இடத்தை குறைத்துள்ளது.

2014 மோதலின் விளைவாகவும், இயல்பான மக்கள் தொகை வளர்ச்சிக்கும், 1.2லட்சம் வீடுகள் பற்றாக்குறை இருப்பதாக ஐ.நா., கூறியுள்ளது. மோதல் முடிந்த பிறகு மூன்று ஆண்டுகளில் 29 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா., நம்புகிறது.

உலகில் அதிக இளைஞர்கள் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காஸாவும் ஒன்றாகும். 15 வயதுக்கு கீழ் 40% பேருக்கும் மேல் உள்ளனர்.

காஸா மருத்துவமனை

சுகாதாரம்:

எல்லையில் விதிக்கப்பட்டுள்ள தடைகளால் பொது சுகாதார சேவைகளை பெறுவது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

ரஃபா எல்லை மூடப்பட்டதால் சிகிச்சைக்காக எகிப்துக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2014க்கு முன்னதாக, எகிப்துக்கு உடல் நல காரணங்களுக்காக மட்டும் நான்காயிரம் பேர் எல்லையை கடந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீப ஆண்டுகளில் இஸ்ரேல் வழியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக காஸாவிலிருந்து மக்கள் வெளியே செல்வதற்கும் அனுமதியளிப்பது குறைந்து கொண்டே வருகிறது. 2012-ல் மருத்துவ காரணங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு 93% பேருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இது 2017-ல் 54 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும், மருந்துகள், டயலசிஸ் மற்றும் இதய செயல்பாடு கண்காணிப்பு இயந்திரம் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் விநியோகத்திற்கும் எல்லையில் விதிக்கப்பட்டுள்ள தடைகளால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வியை போலவே ஐ.நா., 22 சுகாதார பராமரிப்பு வசதிகளையும் நடத்திவருகிறது. ஆனால் இஸ்ரேலுடனான முந்தைய மோதல் உள்ளிட்டவற்றால் சில மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன. 2000-த்திலிருந்து 56 ஆக இருந்த மருத்துவமனைகள் 49-ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் மக்கள் தொகையானது இருமடங்காகியுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவ வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று மருத்துவமனைகள் மற்றும் பத்து மருத்துவ மையங்கள் ஆகியவை மின்சார பற்றாக்குறையால் சேவைகளை நிறுத்தியுள்ளதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீன் பிடித்தல்

உணவு

பலருக்கு உணவு உதவியானது கிடைத்தாலும் காஸாவில் மில்லியன் பேருக்கு மேல் மிதமான முதல் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை சந்திக்கின்றனர் என்கிறது ஐ.நா.,

இஸ்ரேல் விதித்துள்ள தடைகளால் விவசாய நிலத்தை பயன்படுத்துதல் மற்றும் மீன் பிடித்தல் தொழில் போன்றவை கடுமையான சவால்களை சந்தித்துள்ளன.

இஸ்ரேல் அறிவித்துள்ள ஒரு மண்டலப்பகுதியில் ( எல்லையில் காஸாவின் பக்கமுள்ள 1.5 கி.மி) காஸா மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் வருடத்துக்கு 75 ஆயிரம் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதியில் காஸாவின் சிறந்த சாகுபடிக்கான பகுதி என அறியப்பட்ட இடமும் அமைந்துள்ளது. இதனால் காஸாவின் விவசாய துறையானது உள்நாட்டுப் உற்பத்தியில் 1994-லிருந்த 11 சதவீதத்திலிருந்து 2018-ல் ஐந்து சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சில இடங்களில் மீன் பிடிப்பதற்கான தடையையும் இஸ்ரேல் விதித்துள்ளது. இதனால் காஸா கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே மீன் பிடிக்க முடியும். இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால் மீன் பிடித்தல் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பையும், புரதச்சத்தையும் தரும் என ஐ.நா., தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நவம்பர் 12-ல் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீன் பிடித்தலுக்கான கட்டுப்பாடு மூன்று நாட்டிக்கல் மைலில் இருந்து ஆறு நாட்டிக்கல் மைலுக்கு நீட்டிக்கப்பட்டது. எனினும் காஸாவில் இருந்து ராக்கெட் தாக்குதலை சந்தித்தபோது இஸ்ரேல் மூன்று நாட்டிக்கலாக எல்லையை குறுக்கியது. பாலத்தீன மீன்பிடி படகுகள் எல்லையை கடந்தால் இஸ்ரேலிய கப்பல் படைகள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

மின்சாரம்

மின்சாரம்

காஸாவில் மின்சாரம் நிறுத்தப்படுவது தினமும் நடக்கும் ஒன்றாக இருக்கிறது. சராசரியாக ஒருநாளைக்கு மூன்று முதல் ஆறு மணி நேர மின்சாரத்தை மட்டுமே காஸா மக்கள் பெறுகின்றனர்.

காஸா பகுதியானது பெரும்பாலும் இஸ்ரேலில் இருந்து மின்சாரம் பெறுகிறது. காஸாவிலும் ஒரு மின்சார ஆலை இருக்கிறது மேலும் எகிப்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பெறுகிறது. எனினும் இவ்வனைத்தும் சேர்த்தும் காஸாவுக்குத் தேவைப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியை விட குறைவாகவே இருக்கிறது என்கிறது உலக வங்கி.

காஸாவின் மின் ஆலை மற்றும் மக்களில் பலரின் தனிப்பட்ட ஜெனெரேட்டர் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு டீசல் தேவைப்படுகிறது. டீசலின் விலை அங்கே மிகவும் அதிகம் மேலும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

கடலோரத்தில் எரிவாயு வயல் இருக்கிறது. இதனை முறையாக பயன்படுத்தினால் காஸாவுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்கிறது ஐ.நா.,

காஸா மின் ஆலையானது இயற்கை எரிவாயு மூலமாக இயங்குமாறு வடிவமைக்கப்பட்டது. இந்த ஆலை இயங்குவதற்கு தேவையான எரிபொருள் மாற்றியமைப்பதன் மூலம் மில்லியன் கணக்கிலான டாலர்களை சேமிக்க முடியும் மேலும் அதிக மின்சாரத்தையும் தயாரிக்க முடியும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் துப்புரவு சுகாதாரம்

தண்ணீர் மற்றும் துப்புரவு சுகாதாரம்

காஸாவில் குறைவான மழைப் பொழிவு மட்டுமே இருக்கிறது மேலும் பெரும்பான்மையாக சுத்தமான நீர் ஆதாரமும் இல்லை. நிலத்தடி நீரை பெருக்குவதற்கு எந்த ஆதாரமும் அங்கில்லை.

காஸாவில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் தரப்படுகிறது. தண்ணீர் விநியோகமானது சீரற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் மோசமான தரத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. காஸாவில் உள்ள 97% வீடுகளுக்கு தண்ணீர் லாரிகள் மூலம் வழக்கப்படும் தண்ணீரையே நம்பியுள்ளன.

சாக்கடை இன்னொரு பிரச்னையாக உள்ளது. 78% வீடுகள் பொது சாக்கடை சங்கிலியோடு இணைக்கப்பட்டிருந்தாலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகச்சுமையோடு உள்ளன. கிட்டத்தட்ட 90 மில்லியன் லிட்டர் பகுதி சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரானது மத்தியத்தரைக்கடல் மற்றும் குளங்களில் தினமும் கொட்டப்படுகின்றன. அதாவது காஸாவில் 95% நிலத்தடிநீரானது மாசுபட்டுள்ளது.

இந்த சாக்கடை நீரானது தெருக்களில் வழிந்தோடும் ஆபத்து இருக்கிறது. இதனால் இப்பிராந்தியத்தில் மேற்கொண்டு சுகாதார பிரச்னைகளும் ஏற்படும். -BBC_Tamil