கர்நாடகாவிற்கு ஆசைப்பட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக!

பெங்களூர்: கர்நாடகாவில் வெற்றிபெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு இருவரும் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.இதனால் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். 30 வருடங்களுக்கு பின் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி படுதோல்வி அடைந்தது.

கடந்த 4 வருடங்களில் நடந்த பல நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக வரிசையாக தோல்வி அடைந்துள்ளது.நேற்றுவரை பாஜக கட்சிக்கு 273 உறுப்பினர்கள் இருந்தனர். மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை. தற்போது பாஜக கட்சியின் பெரும்பான்மை மொத்தமாக குறைந்து, பெரும்பான்மையை இழந்து இருக்கிறது.

பாஜக கட்சியை சேர்ந்த கர்நாடக எம்எல்ஏக்கள் ஸ்ரீராமுலு, எடியூரப்பா இருவரும் தங்களது நாடாளுமன்ற எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் தற்போது பாஜக கட்சியின் பலம் 271 இருக்கிறது. மொத்தமாக அவைத்தலைவரையும் சேர்த்து 271 பேர் தான் இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு 272 பேர் தேவை.

பாஜக கட்சி கர்நாடகாவை பிடிக்க ஆசைப்பட்டு தற்போது தேவையில்லாமல் இரண்டு எம்பி பதவிகளை இழந்து இருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளுக்கு இப்போதைக்கு தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. இதனால் பாஜக கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி வரை தீர்மானத்தை காவிரி பிரச்சனை காரணமாக அவையில் தாக்கல் செய்யவே முடியவில்லை. இதனால் இன்னொரு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: