கிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு வாய்ப்பு தரவும்

டாக்டர் மஸ்லி மாலிக் கல்வி அமைச்சராக தனது பணியைச் செய்ய, அவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரையும் லிம் கிட் சியாங் கேட்டுகொண்டார்.

அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து, அந்த முன்னாள் விரிவுரையாளரைப் பலர் விமர்சித்து வருவதை தான் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

“ஆனால், புதிய மலேசியாவில் கல்வி அமைச்சராக தனது தகுதியை உறுதிபடுத்த அந்த 44 வயது கல்விமானுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள்,” என கிட் சியாங் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியில் இணைவதற்கு முன்னர், மஸ்லி அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். பக்காத்தான் ஹராப்பான் அவரை சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. மஸ்லி 3,475 வாக்குகள் வித்தியாசத்தில், கெராக்கான் தலைமச் செயலாளர் லியாங் தெக் மேங்-ஐ தோற்கடித்தார்.

கடந்த மே 18-ல், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் மஸ்லியைக் கல்வி அமைச்சராக நியமித்தார். இருப்பினும், அவரை மதப் பின்னனியுடன் தொடர்புபடுத்தி, அந்நியமனத்தைச் சில தரப்பினர் வெறுக்கின்றனர்.

அவர் தாராளமயவாதி, மதத்தில் பழமைவாதி, இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஷாகிர் நாயிக்-ஐ ஆதரிப்பவர் என்றெல்லாம் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், இஸ்லாம் அல்லாதவர்களைப் பற்றிய ஒரு வீடியோ கிளிப் தொடர்பிலும் மஸ்லியை சிலர் விமர்சித்தனர்.

தகவல் தொழில்நுட்ப உலகில்…

ஆனால், அந்த வீடியோ கிளிப்பில் பேசியிருக்கும் நபர் மஸ்லி அல்ல என்று லிம் கூறியுள்ளார்.

“அந்த வீடியோ கிளிப்-ஐ அதிகமாக பகிர வேண்டும், அச்செய்தி மகாதிரைச் சென்றடைய வேண்டும், மஸ்லி கல்வி அமைச்சராக பதவி ஏற்கும்முன்,” எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்கண்டார் புத்ரி எம்பியான லிம், ஒரு தகவலை மற்றவரோடு பகிரும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை நாம் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

“நாம் தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்கிறோம், ஆகவே அதன் விளைவுகளை நாம் உணர வேண்டும்,” என்று அவர் கூறினார்.