“இனி எனக்கு கட் அவுட் வேண்டவே வேண்டாம்…”: சிம்பு!

சென்னை: கட் அவுட் பிரச்சினையில் ரசிகர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்துபோன நடிகர் சிம்பு, இனி தனக்கு யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம் என ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின். நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்தப் படம், தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா, நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

நடிகர் சிம்பு டிரெய்லரை வெளியிட்டார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர், கட் அவுட் பிரச்சினையில் தனது ரசிகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு வேதனை தெரிவித்தார்.

விவேக்கிற்காக வந்தேன்:

மேலும் இது தொடர்பாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ” பொதுவாக நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. காரணம் இந்த மைக் தான். சிறுவர்களை ஹீரோவாக்கி அவர்களும் உறுதுனையாக நடிகர் விவேக் இந்த படத்தில் நடித்துள்ளார். அந்த ஒரு காரணத்திற்காக தான் நான் இந்த விழாவில் பங்கேற்க வந்தேன்.

சந்தானத்தின் அறிமுகம்:

மன்மதன் படத்தில் நடிகர் விவேக் தான் காமெடி செய்திருக்க வேண்டியது. ஆனால் என் விருப்பத்தை ஏற்று அவர் விட்டுகொடுத்ததால் தான் சந்தானம் என்ற நடிகரை அறிமுகம் செய்ய முடிந்தது. அதனால் தான் சந்தானத்துக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

எனது பெற்றோர்:

இந்த சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய அவர்களது பெற்றோருக்கு எனது பாராட்டுகள். எனது தாய், தந்தையால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். எல்லோரும் அவரவர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் நான் என் பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன்.

என் விருப்பம்:

ஏன் என்றால் அங்கு எல்லோரும் பாடம் கற்கிறார்களா என அவர்கள் பார்ப்பதில்லை. யார் முதலில் விடை சொல்கிறார்கள் என்று தான் பார்கிறார்கள். குழந்தைகள் இடையே போட்டியையும், பொறாமையையும் வளர்க்கிறார்கள். அப்படிப்பட்ட சம்பவம் என் வாழ்விலும் நடந்தது. அதனால் தான் எனக்கு கணக்கு வராமல் போய்விட்டது. ஆனால் என் பெற்றோர் என் விருப்பப்படி என்னை வளர்த்தார்கள்.

ரசிகர் கொலை:

எனது மிகப்பெரிய பலம் என் ரசிகர்கள் தான். ஒரு கட் அவுட் பிரச்சினையால் என் ரசிகன் கொல்லப்பட்டிருக்கிறான். அது பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைதான். அந்த பையன் பெற்றோருக்கு ஒரே பையன். என் படம் வரும் போதெல்லாம், காசி தியேட்டரின் மேல் ஏறி அந்த பையன் பால் ஊற்றும் படத்தை பார்த்திருக்கிறேன். அப்படி செய்யாதே என பலமுறை அவனை எச்சரித்திருக்கிறேன். ஆனால் அவன் கேட்கவில்லை.

கேள்விக்குறி:

ஒரு கட் அவுட் பிரச்சினைக்காக ஒரு உயிர் போய்விட்டது. அந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. எனக்கு யாரும் கட் அவுட் வைக்காதீர்கள்.

ரசிகனுக்கு கட் அவுட்:

எனது ரசிகர்கள் மட்டுமல்ல. அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் சேர்ந்து வரும் 24ம் தேதி அந்த பையனுக்கு கட்அவுட் வையுங்கள். என் ரசிகனை நான் மதிக்கிறேன். அதனால் தான் அவனுக்கு போஸ்டர் ஒட்டினேன். விளம்பரதுக்காக அல்ல” என இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்தார்.

tamil.filmibeat.com