மஸ்லி மாலிக் விவகாரத்தில் தவறான எண்ணம் வேண்டாம், சேவியர்

இந்த 14வது பொதுத்தேர்தலில் எனக்கு வாக்களித்துக் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும், நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர உதவிய அனைவருக்கும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்த வெற்றியின் வழி நாங்கள் மமதையோ ஆணவமோ கொள்ளவில்லை. நமக்கு முன்  இருக்கும் மிகப் பெரிய பொறுப்பை, நமக்குள்ள கடமையைக் கண்டும், எம்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் கண்டும் பிரமித்துள்ளோம். அதற்கான, நன்றிக் கடனாக மக்கள் விரும்பும் வகையான ஆட்சியை வழங்கச் சித்தம் கொண்டுள்ளோம்.

 

நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) வெற்றி  சம்பந்தப்பட்ட கட்சித் தொண்டர்களின் மற்றும் தலைவர்களின் வெற்றி மட்டுமல்ல, நாட்டிற்கு நீதி வேண்டி, ஊழல், ஊதாரித்தனம், வீண் விரயத்தைக் கண்டித்த அனைத்து மக்களின் வெற்றியாகும். ஒற்றுமையான, வெற்றிகரமான ஒரு தேசத்தை உருவாக்கச் சிந்தை கொண்ட எல்லா மக்களின் வெற்றியாகும்.

 

சில சக்திகள், நம்மவர்களை வைத்து அரசைப் பலவீனப்படுத்த முயல்கின்றன, இன்றைய நாடாளு\சட்டமன்றத்தில் அதிகமான இந்தியர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதும், இந்தியர்களை அதிக உறுப்பினராகக் கொண்டுள்ள கெஅடிலான் மற்றும் .செ.க ஆகிய இரண்டு கட்சிகளும் இன்றைய  அரசின்  இரு தூண்களாக உள்ளதும் இவர்களின் நப்பாசைகளுக்குக் காரணமாகும்.

 

துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசு பல திறமையானவர்களை, நியாயவாதிகளைக் கொண்டுள்ளது. அவ்வகையிலேயே ஒரு திறமையான மனிதரான டாக்டர் மஸ்லி மாலிக்குக்கும் கல்வி அமைச்சருக்குப் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளார். அவரின் தாயார் ஒரு சீனர் என்பதனையும், சமூகவாதியான ஜோமோ சுந்தரத்தின் நெருங்கிய தோழர் என்பதுடன் எல்லோரிடமும் நன்கு பழகக்கூடியவர். பல புத்தகங்களை எழுதியவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பு ஏற்கும் மஸ்லி மாலிக்.

 

இந்துக்களும், கிருத்துவர்களும், புத்தமதத்தினருங்கூட சில சமய விவகாரங்களில் ஒருமித்தக் கருத்துகளைக் கொண்டுள்ளதைப் போன்று இஸ்லாமியர்களும் ஒரு சில விவகாரங்களில் ஒத்த கருத்துகளைக் கொண்டிருக்கலாம், இது இயற்கை, அதற்காக ஒருவரை ஜாஹிர் நய்க்குடன் ஒன்றுபடுத்தி, அவரும் இவரும் ஒன்றுதான் என்று கதை கட்டக்கூடாது. அவரை அழிக்கத் துடிக்கக் கூடாது.

 

ஸ்லி மாலிக் விவகாரத்தில் நடப்பதும் இதுதான், சில இணையதளத் துஷ்டர்களும், கல்வி அமைச்சில் சில குத்தகைகளின் வழி பெருத்த இலாபம் பெற்றவர்களும் ஒரு நியாயவாதி கல்வியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் தங்கள் திருகுதாளம் மற்றும் சுரண்டல்களுக்கு கல்வி அமைச்சில் இடமிருக்காது என்ற எண்ணத்தில் சில அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

 

குறிப்பாக முகப்பாவனையில் ஏறக்குறைய அவரைப் போன்று முக அமைப்புகளைக் கொண்டவர்களின் சமயச் சொற்பொழிவுகளையும், சில கிராபிக்ஸ் செய்யப்பட்ட காட்சி உரையாடல்களையும் இந்தியர்களின் மத்தியில் உலவவிட்டு, இந்தியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

இதனால், ஆக்ககரமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய சமுதாயத்தின் நேரம் பாழடிக்கப்படுகிறது. பல  நல்ல, சமுதாய மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய பல நல்ல இளைஞர்களின்  சிந்தனைகள் மற்றும் ஆர்வம் சிதைக்கப்படுகிறது என்பதால் சமுதாயம் இது போன்ற இணையப் பதிவுகளைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சேவியர் ஜெயக்குமார்.

 

ஆகவே, நாம் எல்லா மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் மதிப்பளித்து பொறுப்புடன் தொடர்ந்து சேவையாற்ற எல்லா மக்களின் ஒத்துழைப்பும் புதிய அரசுக்கு அவசியமாகிறது. குறிப்பாக, இவ்வரசு மீது இந்தியர்களுக்கு எதிர்பார்ப்பும் தேவைகளும் அதிகம் உள்ளது. அதனை  பூர்த்திச் செய்ய புதிய அரசாங்கத்திற்கு அதிக ஆற்றல் தேவை, அந்த ஆற்றலை வழங்கும் சக்தியே மக்கள் சக்திதான் என்பதனை நாம்  உணர தவறக்கூடாது என்பதை கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் நினைவுறுத்தினார்.