மகாதிர் ‘மாறிவிட்டார்’, கிளேர் இப்போது நம்புகிறார்

டாக்டர் மகாதிரின் பழைய பதிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தற்போது அவர் முன்னெடுத்துவரும் புதுமைகள் பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸ்சல்-பிரௌன், அந்த 92 வயது, அரசியல்வாதி மாறிவிட்டதாக நம்புகிறார்.

முன்பெல்லால், ‘என் வழி’ என்று செயல்பட்ட மகாதிர், இப்போது பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன் இணைந்து, ஒருமித்த கருத்தோடு, ‘நம் வழி’ என செயல்படுகிறார்.

அதற்கு ஓர் உதாரணம், கல்வி அமைச்சர் பதவி என்றார் கிளேர்.

“நம்பிக்கை வருவதற்கு எனக்கு சில காலம் பிடித்தது. நான் அவரை மூன்று, நான்கு முறை சந்தித்திருக்கிறேன், அவர் லண்டன் வந்தபோது.

“ஓரிரு முறை அவருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது, அவர் உண்மையிலேயே உணர்ந்துவிட்டதை நான் பார்க்கிறேன், அதுதவிர, ஊடக சுதந்திரத்தின் முக்கியத்தையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

“அவர் சீர்திருத்த செயல்திட்டத்தில் உறுதியாக இருக்கிறார், அது எல்லாவற்றையும் மிகவும் சக்திவாய்ந்ததாக்குகிறது …

“மகாதீர் ஒரு மகத்தான உந்துசக்தியாக இருக்கிறார், மலேசியாவின் நம்பிக்கை கொண்ட ஒரு தலைவர், அவர் சீர்திருத்த செயற்திட்டத்தில் மிகவும் உறுதியுடன் உள்ளார், பலரும் அதை ஆதரிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

22 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில், மகாதிர் ஊடகத் துறைகளின் சுதந்திரத்தை நசுக்கி வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.