நஜிப் எம்ஏசிசி தலைமையகம் வந்தார்

எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். வழக்கு விசாரணையில் சட்சியமளிக்க, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு வந்தார்.

காலை மணி 9.42 அளவில், போலிஸ் அதிகாரிகளின் கடுமையான கட்டுப்பாட்டுக்கு நடுவே, தொயோத்தா வெல்ஃபையர் வாகனத்தில் நஜிப் அங்கு வந்தார்.

அந்தப் பெக்கான் எம்பி மட்டுமே, விசாரணை அறையில் எம்ஏசிசி அதிகாரிக்கு விளக்கமளிப்பார் என நம்பப்படுகிறது.

காலை 8 மணியளவில், நஜிப் சம்பந்தப்பட்ட அவ்வழக்கு தொடர்பான செய்திகளைச் சேகரிக்க, பல உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் எம்ஏசிசி தலைமையகத்தில் குவிந்தன.

இதற்கிடையில் , எம்ஏசிசி தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல், இன்று காலை 11.30 மணியளவில் ஊடக மாநாட்டை நடத்தவுள்ளார்.

கடந்த வெள்ளியன்று, எம்ஏசிசி அதிகாரிகள் குழு ஒன்று, கோலாலம்பூர், தாமான் டூத்தாவில் உள்ள நஜிப்பின் வீட்டிற்குச் சென்று, அந்த வழக்கு விசாரணைக்கு உதவ எம்ஏசிசி அலுவலகம் வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தது.

2012-ஆம் ஆண்டில், நிதி அமைச்சின் கீழ் வைக்கப்பட்ட எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர்., 1எம்டிபி-இன் துணை நிறுவனமாகும்.

26 ஜனவரி 2016 அன்று, RM2.6 பில்லியன் மற்றும் எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நஜிப் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்று அட்டர்னி ஜெனரல் முகமட் அஃபெண்டி அலி உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

-பெர்னாமா