நிதி அமைச்சர்: 1எம்டிபி கூறியது பொய்! அது கிட்டத்தட்ட ரிம7 பில்லியன் உதவியாகப் பெற்றுள்ளது

 

முந்தைய பிஎன் அரசாங்கத்திடமிருந்து 1எம்டிபி கிட்டத்தட்ட ரிம7 பில்லியனை உதவியாகப் பெற்றுள்ளது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று பகிரங்கப்படுத்தினார்.

அதன் கடன்களைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்று 1எம்டிபி கூறிவந்ததற்கு முற்றிலும் எதிர்மாறாக இந்த நிலை இருக்கிறது என்றாரவர்.

பட்டியலின் அடிப்படையில், 1எம்டிபியின் சார்பாக நிதி அமைச்சு அளித்தத் தொகை ரிம6.98 பில்லியனை எட்டியுள்ளது என்று குவான் எங் மேலும் கூறினார்.

இது வரையில் 1எம்டிபியைக் காப்பாற்றி வந்தது நிதி அமைச்சுதான் என்று இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

தாம் பதவி ஏற்றதும் தாம் செய்ய வேண்டிய வேலைகளில் அவசரமானது 1எம்டிபியின் கடன்களுக்கான வட்டியைக் கட்ட வேண்டியதாகும் என்று தம்மிடம் கஜனாவின் துணைத் தலைமை அதிகாரி சித்தி ஸாவ்யா முகமட் தேசா தெரிவித்ததாக குவான் எங் கூறினார்.

அடுத்து, 1எம்டிபி கட்ட வேண்டிய பணம் ரிம143.75 மில்லியன் ஆகும். அதை மே 30 இல் கட்டியாக வேண்டும்.

இந்த ரிம143.75 மில்லியன் தவிர, செப்டெம்பரிலிருந்து நவம்பர் மாதங்களுக்கிடையில் இன்னொரு ரிம810.21 மில்லியன் மதிப்புடைய வட்டிகள் கட்டப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.