மக்கள் மனதில் பன்னிரண்டு  நாள்கள் ஏற்படுத்திய மாற்றம்

-கி.சீலதாஸ், மே 23, 2018.

 

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 28.4.2018 இல்  வேட்புமனுதாக்கல்.  அந்தத்  தேதியிலிருந்து மே 8   ஆம்  தேதி  வரை  தேர்தல் பிரச்சாரம்,  மே9 இல் வாக்குப்பதிவு மற்றும் மக்களின் தீர்ப்பு. ஆகமொத்தம் பன்னிரண்டு   நாள்களில்  வாக்காளப்  பெருமக்கள்  முடிவெடுத்தாக  வேண்டும். வாக்காளப்  பெருமக்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியைச்  சற்று  சிந்தித்துப்  பாருங்கள்.

பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்கு முன்னமே அதற்கான ஏற்பாடுகளில் தேசிய முன்னணி அரசு தீவிரமாக இறங்கிவிட்டதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. எடுத்துக்காட்டாக, தேர்தல் தொகுதிகளை மாற்றி அமைத்து அந்தத் திருத்தங்களை விரைவாகச் சட்டமாக்கி  அமல்படுத்தப்பட்டது.  கொடுக்கப்பட்ட இலவசங்கள் கணக்கிலடங்கா.

ஜனநாயகத்தில்  மக்களின்  பங்களிப்பு  மிகவும்  முக்கியமாகும்.  நடந்தது  என்ன?  வாக்காளர்கள்  வாக்களிப்பதைத்  தடுப்பதில்தான்  கவனம்  மிகுந்து  காணப்பட்டது.  அதுமட்டுமல்ல,  வாக்காளர்கள்  தொல்லையின்றி  வாக்குப்  பதிவு  செய்ய  போதுமான  வசதிகள்  செய்துத்தரப்படவில்லை.  ஏறக்குறைய  மூன்று,  நான்கு  மணிநேரம்  வாக்காளர்கள் காத்துக்கிடந்தார்கள்.  வாக்களிக்க  பல கோடிக்கணக்கில்  செலவு செய்யும்போது  வாக்காளர்களின்  சௌவுகரியத்தையும்  கவனத்தில்  கொள்ளாதது  ஆச்சரியம். அதுவும்  ஒரு  சூழ்ச்சி  என்ற  கருத்தும்  பரவலாக  உள்ளது.  காத்திருக்கமுடியாமல்  வாக்களிக்காமல்  போகட்டும்  என்று  திட்டம்போட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்ற எண்ணத்தைப்  புறக்கணிக்க  முடியுமா?

வெற்றி உறுதி என கொட்டப்பட்ட முரசும் பயங்கரமாக ஒலித்தது. அரசியல் கட்சிகள்‌ பிரச்சாரக் கருவிகளை எப்போதோ முடுக்கிவிட்டார்கள். அதிலும் நயவஞ்சகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் பிரச்சாரம்  வாக்காளர்களுக்கு அன்றாடம்  சென்றடைந்தது. தேர்தல்  பிரச்சாரத்தின் உச்சக்கட்டம், ஏப்ரல் 28 லிருந்து மே 8 நள்ளிரவு வரை. அரசியல் கட்சிகள்  வாக்காளர்களை  விடாமல் துரத்தினார்கள்.  இது ‌ எப்படி இருந்தது?

ஒரு பொருளை விற்க முற்படும் வியாபாரி, தன் பொருளைப் பற்றி அடுக்கடுக்காகப் புகழ்ந்து பேசுவான். பொருளின் தரத்தை மிகைப்படுத்தி பேசுவான். பொருளை  வாங்க  வந்தவரை  சிந்திக்கவிடாமல், சிறிது கூட ஓய்வு கொடுக்காமல் தன் பொருளின் மகிமையைப் பற்றி சொல்லுவான். பாவம், பயனீட்டாளர்  வியாபாரியின்  வணிகச் சாதுர்யத்திற்கு  இடமளித்து பொருளை வாங்கிவிடுவார்.  இந்த முறையையும்  தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளின் அணுகுமுறையை  ஒப்பிட்டுப்பாருங்கள். உண்மை புலப்படும்.

ஆளும் கட்சி தமது பிரச்சார  இயந்திரங்களை முடுக்கிவிடும்போது அதை செவ்வனே செய்து முடிக்க அதிகார வர்க்கம் தயாராக இருந்தது என்று மக்களுக்குத்  தெரியும்.   எனவே,  இவற்றை உன்னிப்பாக கவனிக்கும்போது, வாக்காளர்களைத் திக்குமுக்காடச் செய்து, நிலைகுலையச் செய்து, தடுமாற்றத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்ற யுக்தி பலமடைந்தது. பணபலம் படைத்த கட்சிகள் வழங்கிய விருந்துகளுக்கு அளவில்லை. கைச்செலவுகளுக்குப் பணம், மோட்டார் வாகனங்களுக்கு  எண்ணெய் நிரப்பப்பணம். இவைபோல் பணப்புழக்கம் கட்டுக்ககடங்காத நிலையை அடைந்ததைக் காணமுடிந்தது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? வரிமேல் வரி விதிக்கும் போது தேசிய கடணைத் தீர்க்க வேண்டும் என்றார்கள். தேர்தலில் வாரி இறைத்தப் பணத்தை தேசிய கடனைத் தீர்க்க பயன்படுத்தி இருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை?

ஆகமொத்தத்தில், குறுகியக் கால தேர்தல் பிரச்சாரம், கனவில் கூட நினைத்துப்  பார்க்க முடியாத  அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள்,  இடைஞ்சல்கள், வாக்காளப்  பெருமக்களுக்குக் கொடுக்கப்பட்ட இன்னல்கள், பதிவு செய்யப்பட்ட  வாக்காளர்களின்  பெயர்கள்  மாயமானது, வாக்குச்சாவடி மாற்றம் யாவும் மக்களின் மனதில் மாற்றத்திற்கான விதைகள் விதைக்க உதவியது.  ஜனநாயகத்தில்  மாற்றம் ஒரு புதிர் அல்ல, மாறாக, அது  ஒரு புனித வழி. ஜனநாயகத்தில், நியாயமான, கன்னியமாக முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் உண்டு. அவற்றை மறுப்பது ஜனநாயகத்திற்கு முரணானதாகும். அநாகரீகமாக முன்வைக்கப்படும் கருத்துகளும் ஜனநாயகத்தின் பகைவர் என்றாலும் பொருந்தும்.  மக்கள் தங்களின் வாக்குகளைத் தைரியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தத் துணிவும், தெளிவும் அவர்களின் மே மாத 9ஆம் தேதி முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. பணம், பசப்பு மொழி, அதிகார மிரட்டல், யாவும் மக்களின் மனதில் எடுபடாது என்பதற்கு இதைவிட வேறு முகாந்திரம் தேவையா? இதற்கான விடைகளின் தேடலை நீங்களே மேற்கொள்ள வேண்டும்.