பாலியல் அடிமைகளாக விற்கப்படும் பெண்கள்!

கம்போடியாவில் மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் கும்பலை பிடிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என கடத்தல் தடுப்பிற்கான தேசிய கமிட்டி தெரிவித்துள்ளதுடன், கம்போடியாவைச் சேர்ந்த பல பெண்கள் திருமணம் என்ற பெயரில் சீனாவில் பாலியல் அடிமைகளாக விற்கும் அவலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டில் இக்குற்றங்கள் தொடர்பாக 159 வழக்குகள் பதியப்பட்டு 203 கைதுகள் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 72 சதவீதம் அதிகமாகும். அந்த ஆண்டில் 159 வழக்குகளும் 113 கைதுகளும் நடந்திருந்தன.

அதே சமயம், கடந்த ஆண்டு மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 345 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 138 பேர் 15 வயதிற்குட்பட்டோர்,

40 பேர் 15 முதல் 17 இடையிலானோர், 167 பேர் 18 வயதிற்கு மேற்பட்டோராவர். மனித கடத்தலில் சிக்கிய பல கம்போடியர்கள் வெளிநாடுகளிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வாறான குற்றங்கள் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையில், மனித கடத்தலில் பாதிக்கப்படும் முதன்மையான நாடுகளின் வரிசையில் ‘கம்போடியா’ வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு கம்போடியா, லாவோஸ், மியான்மர், மற்றும் வியட்நாமைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வேலை தேடி செல்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

“மனித கடத்திலில் பல வகைகள் உள்ளன, அதில் வேலை தேடும் மக்களை குறிவைத்து நிறைய நடக்கின்றன. இதில் பல முறை பெண்கள் சிக்கிக்கொண்டு பாதிக்கின்றனர். அவர்கள் குடும்பத்தை விட்டு நெடுந்தூரத்தில் இருப்பதால் தரகர்கள் அவர்களை எளிதாக ஏமாற்றி விடுகின்றனர்” எனக் கூறியிருக்கிறார் கம்போடிய பாலின மற்றும் வளர்ச்சித்துறையின் நிர்வாக இயக்குனர் ரோஸ் சோப்ஹீப். கம்போடியாவைச் சேர்ந்த பல பெண்கள் திருமணம் என்ற பெயரில் சீனாவில் பாலியல் அடிமைகளாக விற்கும் அவலமும் பெருமளவில் நடப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடத்தல் தடுப்பிற்கான தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய கம்போடிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் சோயு பன் எங், “மனித கடத்தலை பார்த்து கண்மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஏனெனில் அது மனித உயிர்களை, மக்களின் உரிமைகளை, கண்ணியத்தை பாதிக்கின்றது” எனக் கூறியிருக்கிறார். வரும் காலங்களில் மனித கடத்தல் தொடர்பான கம்போடியாவின் நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://athirvu.in