புது  தலைமுறையின்  எதிர்பார்ப்பு.

  • கி.சீலதாஸ், மே 30, 2018

துன்  டாக்டர்  மகாதீர்  முகம்மது  மீண்டும்  நாட்டின்  பிரதமராகப்  பொறுப்பேற்றுள்ளார்.  1981 ஆம்  ஆண்டு  முதல்  2003  வரை  அவர்  இருபத்திரண்டு  ஆண்டுகள்  பிரதமராக  நாட்டை  நிர்வகித்து  ஓய்வு  பெற்றவர்.  நாட்டின்  அவலங்களைக்  கருத்தில்  கொண்டு  பதினைந்து  ஆண்டுகால  ஓய்வுக்குப்  பின்  மறுபடியும்  மக்களின்  விருப்பத்திற்கேற்ப  பிரதமராகிவிட்டார்.  2003 இல்  ஓய்வு  பெற்ற  மகாதீர்,  2016 ஆம்  ஆண்டு  வரை  தீவிர  அரசியலில்  இறங்கவில்லை.  2016 ஆம்  ஆண்டின் முற்பகுதியில்  அவரின் உறுதியான  அரசியல் மறுபிரவேசம்  நிகழ்ந்தது.   பதினாங்கு  ஆண்டுகள்  அரசியல்  வனவாசம்  முடிந்ததும்  நாட்டின்  அரசியல்,  பொருளாதார,  சமுதாய  சீர்கேடுகளைக்  களையும்  காலம்  வந்ததுவிட்டது  என்பதை  உணர்ந்த  அவர்,  தமது  அரசியல்  பயணத்தை  தொடர்ந்தார்.  இன்று  அவர் மலேசியாவின் ஏழாவது பிரதமர்.

எப்படிப்பட்ட  பிரதமராகத்  திகழ்கிறார்? எப்படிப்பட்ட  பிரதமராக  அவர் திகழவேண்டும்  என்பதில்  தான்  நாம்  கவனம்  செலுத்தவேண்டியுள்ளது.

சுமார்  முப்பத்தெட்டு  ஆண்டுகளாக  இந்த  நாடு  இருவகையான  ஆட்சித்  தரங்களைக்  கொண்டிருந்தது  எனலாம்.  ஒன்று,  1981 ஆம்  ஆண்டு  முதல்  மகாதீரின்  நிர்வாகத்தின்  போது   பொருளாதார  மேம்பாடு  செம்மையாக  இருந்தது.   அதே  சமயத்தில்  சமுதாயத்தில்  நல்லெண்ண  வளர்ச்சியில்  அது  பொலிவிழந்ததைக்  காணமுடிந்தது. இது  இரண்டாவது  தரம். தமது  இருபத்திரண்டு  ஆண்டுகால  நிர்வாகத்தில்  நன்மைகளும், அவற்றிற்கு  முரணான  நடவடிக்கைகளும்  தென்பட்டபோதிலும்  தெளிவான  வானத்தை  கருமேகங்கள்  மூடிவிடுவதுபோல  சில  முடிவுகள்  அவரின்  நல்ல  செயல்களை  மறைத்திடச்  செய்தது.  மகாதீரின்   ஆட்சியின்போது  நேர்ந்த  பல  கோளாறுகளுக்கு  அவர்  மட்டும்தானா  பொறுப்பு  என்ற  கேள்விக்கு  அவர்தான்  பதில்  சொல்லவேண்டும்,  காரணம்,  அம்னோவும்  சரி,  அதன்  பங்காளிக்  கட்சிகளும்  ஒருமித்து  கண்ட  தேசிய  முன்னணியும்  சரி,  அவற்றின்  தலைவர்கள் சோடையானவர்கள்  என்று  சொல்லவே  முடியாது. 1981 – 2003 இடைப்பட்ட காலத்தில்  நிர்வாகக் குற்றங்கள் நேர்ந்ததற்கு தேசிய முன்னணி,  குறிப்பாக அம்னோ தலைவர்கள்  பொறுப்பேற்றாக வேண்டும்.  ஏனெனில்  அம்னோவின்  சர்வதிகாரப்போக்கு  அப்படி  அமைந்திருந்தது.

மகாதீரின்  அரசியல் வனவாசத்தின் போது தமது  வாரிசுகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அறிந்ததும்  மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். துன் அப்துல்லா படாவியை  பிரதமராக்கி  நெடுங்காலம்   மகிழமுடியவில்லை.  அவரை  இறக்கிவிட்டு   செஞ்சோற்றுக்கடன் தீர்க்க டத்தோ ஸ்ரீ நஜீபை பிரதமராக்கி மகிழ்ந்தார். அதுவும்  நீடிக்கவில்லை.

காலப்போக்கில் நஜீபின் உண்மையான சொரூபம் வெளிப்பட்டது. அவரின் நடவடிக்கைகள் நாட்டை பாழ்நிலைக்குக் கொண்டுப் போகும் என்பதை உணர்ந்ததும், தம் தவறுகளை உணர்ந்தார் மகாதீர். தாம் யாரை அரியணையில் அமர்த்தினாரோ அவரை இறக்கும் பொறுப்பை ஏற்றார். இதை உணர்ந்த நஜீபும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட பிரச்சாரம், விகாரத்தின் உச்சத்தை அடைந்தது. அதுமட்டுமல்ல, மகாதீரின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடிக்கும் பொருட்டு தமது அதிகார வலிமையைப் பயன்படுத்திய  நஜிப்பைத்தான்  கண்டோம். ஒருவகையில் தமது ஆசானிடம் கற்ற வித்தையையே தாம் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.

1988 ஆம்  ஆண்டில்  அம்னோவில்  அதிகாரப்  போராட்டம்  தலையெடுத்து,  அக்கட்சியின்  பிளவுக்கு  வித்திட்டது.  அப்போது  அம்னோவிலிருந்து  பிரிந்து  போனவர்கள்  யாவரும்  மகாதீருக்கு  எதிர்ப்பாகச்  செயல்பட்டனர்.  மகாதீரின்  கொள்கையை  எதிர்த்தார்கள்.  1946 ஆம்  ஆண்டு  அம்னோ  உணர்வை  மறு  உறுதி  செய்யும்  விதத்தில் “செமங்காட்  46”  அரசியல்  இயக்கம்  ஆரம்பிக்கப்பட்டது. இது  மகாதீரின்  அம்னோவுக்கு  எதிராகச்  செயல்பட்டது.

1946ஆம்  ஆண்டு  நாட்டுப்பற்று  கோஷத்தை  எழுப்பி  மகாதீரை  எதிர்த்தவர்களில்  நாட்டின்  முதல்  பிரதமர்  துங்கு  அப்துல்  ரஹ்மானும், அப்துல்லா  படாவியும்  அடங்குவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

செமங்காட் 46,  தேசப்பற்று  அல்லது  உற்சாகத்தை  புதிப்பிக்க  முயன்றவர்களின்  கொள்கை,  அரசியல்  நடவடிக்கை  மலாய்க்காரர்களை  மட்டும்  கவனத்தில்  கொண்டிருந்தது.  எல்லா  மலேசிய  இனத்தவர்களையும்  அரவணைத்து  புது  சகாப்தத்தைக்  காணும்  முயற்சியில்  இறங்காதது  அவர்களின்   வீழ்ச்சிக்கான  காரணங்களில்  ஒன்றாகும்.   ஆகமொத்தத்தில்,  கட்சிப்பூசலை  அம்பலத்துக்குக்  கொண்டு  வந்த  இயக்கம்   செமாங்காட் 46  என்ற நிலைக்கு  உட்படுத்தப்பட்டபோது,  மலாய்க்காரர்களே  அதை  ஆதரிக்கத்  தயங்கினார்கள்.  இப்படிப்பட்ட  போக்கின்  காரணத்தால்  மகாதீரை   அசைக்கமுடியவில்லை.

ஆனால், 2016 இல், மகாதீரின் அணுகுமுறை எப்படி இருந்தது? இந்தியாவில்  குறிப்பாகத்  தமிழ்நாட்டில் அறுபதுகளில் காங்கிரஸுக்கு எதிராகச் செயல்படத் துணிந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி) தமது பரம எதிரியான அண்ணாதுரையோடு  அரசியல் கூட்டு வைத்து தாம் வளர்த்த காங்கிரசையே தோற்கடித்தார். அதே முறையைத் தான் மகாதீர் மேற்கொண்டார் என்று ஒப்பிடத்தூண்டுகிறது.

காலங்காலமாக பகைமையோடு பார்த்த  ஜனநாயக  செயல் கட்சியோடும், அதன் முக்கியத்தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங்; தமது அரசியல் சீடர்களில் ஒருவரும், தம்மால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு,  பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பரம விரோதியாகிவிட்ட டத்தோ ஸ்ரீ அன்வர் இபுராஹிம்  போன்றவர்களோடு  உடன்பாடு  கண்டு புது அரசியல்  வியூகத்தை வகுத்து வெற்றிக்கு வழிகாட்டினார்  மகாதீர்.  ஆனால்,  பதினான்காம் பொதுத் தேர்தலுக்கு முன்பு நஜீபும் அவருடைய திட்டத்தார்களும் மேற்கொண்ட ஒவ்வொரு  நடவடிக்கையும்  மகாதீரையும், அவர் சார்ந்த கட்சியையும், அவரைச் சார்ந்தவர்களை  குறிவைத்து பழிவாங்கும் அத்தியாயம்  ஒன்றன்பின்  ஒன்றாக அரங்கேற்றத்  தவறவில்லை.  இவற்றை எல்லாம் மக்களுக்குத் தெரியாது அல்லது அவர்களின் கவனத்தை ஈர்க்காது  என்ற  நஜிப்பின்  தப்புக் கணக்கு பெரும் ஏமாற்றத்தில்   முடிந்தது.

மக்களை  மயக்க  நிலையிலேயே  வைத்திருந்து,  காலத்தை ஓட்டிவிட முடியும் என்ற நஜீப்பும் அவரைச் சார்ந்தவர்களின் கனவும் தவிடுபொடியாக்கினார்கள் வாக்காளப் பெருமக்கள்.  இதிலிருந்து என்ன தெரிகிறது? சாணக்கியத்துவம் இனிமேலும் எடுபடாது, அரசியல் சூழ்ச்சி, சாணக்கிய முறைகளைக் கையாளுவது,  அடக்குமுறை,  மக்களைப் பிரித்து ஆள முடியும் என்ற எண்ணம், ஏற்றத்தாழ்வு, இனவாரியான கெடுபிடி, சமயவாரியான அரசியல், பொருளாதார  வேறுபாடு  ஆகிய  அணுகுமுறைகள்  யாவும் மாறிவரும் காலத்துக்கு ஏற்றவை அல்ல என்பதைத்தான் மே 9 ஆம் தேதி மக்களின் தீர்ப்பு  உறுதிப்படுத்துகிறது.

மகாதீருக்கு நிர்வாகப் பொறுப்பு புதிதல்ல. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கும் நிர்வாகத்துறை புதிதல்ல. ஆனால், பலர் நிர்வாகத்துறைக்கு,  லிம்  குவான்  எங் தவிர்த்து  புதியவர்கள்.  மே  மாத ஒன்பதாம் தேதி மக்கள் அளித்தத் தீர்ப்பை மனதிற்கொண்டு செயல்படவேண்டும் என்பது காலம் நினைவுபடுத்தும் பாடமாகும்.

புதுமைகளை  நோக்கி  நாடு  நடைபோடவேண்டும்.  அதைத்தான்  மலேசியர்கள்  விரும்புகிறார்கள்.  அந்த  விருப்பத்தை  உணர்ந்து  மதிப்பளிப்பதுதான்  டத்தின் ஸ்ரீ வன்  அஸிஸாவுக்கு  வழங்கப்பட்ட  துணைப்பிரதமர்  பொறுப்பு,  பெண்களை  பின்தங்கிய  காலம்  இனி  எடுபடாது  என்பதைத்  தெளிவுப்படுத்தியதோடு  இனிமேல்  நல்ல  முன்னேற்ற  எண்ணங்களுக்கு  முதலிடம்  தரப்படும்  என்றுதான்  இந்தச்  செயல்  உணர்த்துகிறது.  மலேசியாவில்  புதிய,  எல்லா  இனத்தவர்களும்  அச்சமின்றித்,  கவுரவத்துடன்  வாழ  புது  வழி  போடப்பட்டுவிட்டது  என்பதற்கு  சான்றாக  விளங்குகிறது  அமைச்சரவைப்  பிரதிநிதித்துவம்.  புது  மலேசியாவை  கனவு  காண்பதில்  என்ன  தவறு?

இதற்கு  முன்பு, மக்கள்  பலவிதமான  இடர்பாடுகளுக்கு  உட்படுத்தப்பட்டனர்  என்பது   வெள்ளிடைமலை.  ஊழல்  பெருச்சாளிகளின்  அட்டகாசம் பிரமிக்கச்  செய்கிறது.  எங்கும்  எதிலும்  ஊழல்  என்ற  நிலை  மாறி  ஊழலை  ஒழிக்க  உதயமானது  ஒன்பது  மே  மக்கள்  புரட்சி.  தூய்மையான  அரசு,  எல்லோரும்  மலேசியர்கள்  என்ற  உணர்வு  வளரவேண்டும்.  அது  நிரந்தரமாகிவிடவேண்டும்.  இப்படிப்பட்ட  நல்ல  கருத்துகளுக்கு  மாற்றுக்கருத்து  எடுபடாது  என்பதை  புதிய  அரசு  உணரவேண்டும்.  அரசு  பெறுப்பேற்றிருக்கும்  ஒவ்வொருவரும்  உணரவேண்டும்.  மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம்தான் புது மலேசியாவுக்கான கலங்கரை விளக்கம்.

9ஆம்  தேதி  தேர்தல்  முடிவுகள்  மக்களின்  விருப்பத்தைத்  தெளிவுப்படுத்துகிறது.  அது  புதுமையான  அரசியல்  வாழ்க்கைக்கு  கோடிகாட்டுகிறது.   புதுமைக்கு  வழிகோலும்   இளம்  தலைமுறையினர்  புது  பாதையைக்  காண  விரும்புகின்றனர்.  அதைத்தான்  புது  அரசு  கவனத்தில்  கொண்டிருக்கவேண்டும்.  மகாதீர்  கடந்த  22  ஆண்டுகள்  பிரதமராக  இருந்தபோது  பழைய  உணர்வுகளுக்கு  மதிப்பளித்து  செயல்பட்டார்.  இன்றையத்  தலைமுறை    புது  வழிமுறைகளை  கண்டுவிட்டனர்.  அவர்களின்   எதிர்பார்ப்புதான்  முக்கியம்.  இளம்  தலைமுறையினரின்  எதிர்பார்ப்பை  மகாதீர்  மற்றும்  அவருடைய  அமைச்சரவை  நிறைவேற்றியே  ஆகவேண்டும். நம்பிக்கைக்  கூட்டணி  ஆட்சி  செய்யும்  மாநிலங்களிலும்  இந்த  மாற்றத்திற்கு  வழிவிடவேண்டும்  என்பதும்  மக்களின்  தலையாய  நம்பிக்கையாகும்.