ஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி படிக்கனும்!

30 ஆண்டுகால காங்கிரசை கவிழ்த்தா ஜனதா மூன்று ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க வில்லை. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்திய நம்பிக்கை கூட்டணி, தரமான ஆட்சியை வழங்க வேண்டுமானால், அது பிளவுகளை ஆரம்ப முதலே அகற்ற வேண்டும்

சிறந்த இலக்கியவாதியும் மடைதிறந்த வெள்ளம் போன்று சொற்பெருக்காற்றும் மேடைப் பேச்சாளரும் தடாலடி அரசியல்வாதியுமான ‘நினைவில் வாழும்’ முனைவர் கா.காளிமுத்து, எம்ஜிஆர் தலைமையியான அதிமுக-வில் செல்லப் பிள்ளையைப் போல வலம் வந்தவர்.

இன்னும் சொல்லப் போனால், எம்ஜிஆரால் கொம்பு சீவி விடப்பட்ட காளையாக வளைய வந்தவர் என்றுகூட கூறலாம்.

‘கரந்த பால் மடி புகாது’; ‘கருவாடு மீனாகாது’; ‘சுடுகாடு சென்ற பிணம் வீடு திரும்பாது’; அதைப்போல, காலாவதியான திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்றெல்லாம் திமுக-வை வசைபாடியவர் காளிமுத்து.

ஆனாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது; அப்போது, மனங்கூசாமல் திமுக-விற்கு திரும்பினார் அவர். திரும்பிய காளிமுத்து, இத்துணைக் காலமும் திசை மாறிய பறவையைப் போல திரிந்து கொண்டிருந்தேன். இப்பொழுது, தாய் வீட்டிற்கு திரும்பியதைப் போல உணர்கிறேன் என்றார். கூடவே, ஜெயலலிதாவை ஒருமையில் விளித்து கடுமையாக விமரிசனமும் செய்தார்.

அப்படி யெல்லாம் பேசிய காளிமுத்து, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வில் தஞ்சம் அடைந்தார். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எம்ஜிஆர் காலத்தில் அவர், திமுகவை விமர்சித்தது சரி; ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழ் நாட்டு காங்கிரஸில் உறுப்பினர்களைவிட, தலைவர்கள்தான் அதிகம்; காங்கிரசில் இருக்கிற கொஞ்சநஞ்ச தொண்டர்களும் காக்கைக் கூட்டத்தைப் போல எந்த நேரமும் சண்டை இடுகின்றனர். அப்படி அடித்துக் கொள்ளும் காக்கைக் கூட்டத்தை சில வேளையில் எண்ண முடியாது; ஆனால் சண்டை போட்டுக் கொள்ளும் காங்கிரஸ் தொண்டர்களை எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு காங்கிரஸ் தொண்டர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர். வெள்ளை நிற குல்லாவை அணிவதைத் தவிர வேறொன்றும் அறியாத தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மேடை ஒரு கேடா? என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தவர் காளிமுத்து.

கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் இந்திரா காந்தியோ தமிழகத் தலைவர் எம்.பி.சுப்பிரமணியமோ வருந்துவார்களே என்ற கவலை யெல்லாம் காளிமுத்துவிடம் கிடையாது. அவரை எம்ஜிஆரும்  அடக்கியது கிடையாது. வாயாடித் தனமாகப் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்க, காளிமுத்துதான் சரியான ஆள் என்று எம்ஜிஆர் காளிமுத்துவின் பேச்சை இரசித்ததுதான் உண்மை.

ஏறக்குறைய அந்தக் காளிமுத்துவைப் போல, மக்கள் நீதிக் கட்சியின்(பிகேஆர்) தேசிய உதவித் தலைவர்  ரஃபிசி ரம்லியும் பேசி வருகிறார். எம்ஜிஆரின் இரசிகரான டத்தோஸ்ரீ அன்வாரும், எம்ஜிஆர் காளிமுத்தை கையாண்டதைப் போல ரஃபிசியை கொம்பு சீவி விடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் போக்கு, கூட்டு அரசியலைப் பற்றியெல்லாம் ரஃபிசி ரம்லி சற்றே அறிந்து கொள்வது நல்லது. 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்திய தேசிய அரசியல் எட்டிய மறுமலர்ச்சிக் கட்டத்தை தற்பொழுது மலேசிய அரசியலும் எட்டியுள்ளது.

அரசியலில் வல்லமைமிக்கவராகத் திகழ்ந்தவர் இந்திரா காந்தி. அவரின் இளைய மகனும் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சஞ்சய் காந்தி பட்டத்து இளவரசரைப் போலவே செயல்பட்டார். அப்படிப்பட்ட இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் 1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியுற்றனர்.

அந்தக் கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பசுவும் கன்றும் இருந்தது. அதனால், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, பசுவும் தோற்றது; கன்றும் தோற்றது என்று தலைப்பிட்டு காங்கிரஸ் தோல்வி குறித்து செய்தி வெளியிட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதாக் கட்சி  என்ற பெயரில் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைத்த ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது.

எதிரும் புதிருமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளெல்லாம் இணைந்து உருவாக்கிய ஜனதாக் கட்சி, பதவிக்கு வந்ததும் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். குறிப்பாக, துணைப் பிரதமராக இருந்த சரன்சிங் கொடுத்த நெருக்கடி தாங்க மாட்டாமல் மொரார்ஜி பதவி விலகினார்.

அதைப் போலவே அடுத்த பத்தாண்டுகளில் வி.பி. சிங் தலைமையில் மீண்டும் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியும் சொற்ப காலத்திலேயே கவிழ்ந்தது. அவர் துணைப் பிரதமராக நியமித்த தேவிலால் செய்த அக்கப்போரான வேலைகளால் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வி.பி. சிங்  பிரதமர் பதவி இழக்க நேர்ந்தது.

இதனால், இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சிதான் நிலையான ஆட்சியைத் தரும் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றியது. இதற்கு அடிப்படைக் காரணம், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கூட்டணிக் கட்சியில் இருந்தவர்களிடையே ஒருமித்த உணர்வும் ஒற்றுமைப் போக்கும் அற்றுப் போனதுதான்.

தற்பொழுது மலேசியாவில் எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 61 ஆண்டுகால அரசியல் – ஆட்சி பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் புதிய ஆட்சியையும் நிறுவியுள்ள நம்பிக்கைக் கூட்டணியின் பெரியக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் தேசியப் பொறுப்பில் இருக்கும் ரஃபிசி ரம்லி, நம்பிக்கைக்  கூட்டணி ஆட்சி அமைந்த ஆரம்பம் முதலே மூர்க்கத்தனமான கருத்துகளை வெளியிட்டு வருவது பொருத்தமாக இல்லை.

பிரதமர் துன் மகாதீர், மேத் திங்கள் 11-ஆம் நாள் முதற்கட்டமாக நான்கு அமைச்சர்களை அறிவித்த அன்றே, பிகேஆர் கட்சி சார்பில் எதிர்ப்பான கருத்தை வெளியிட்டார் ரஃபிசி. ஏதும் மனத்தாங்கல் இருந்தால், அதை காதும் காதும் வைத்தாற்போல அமைதியாக கலந்து பேசி மேல்மட்ட அளவில் சுமூகமான முடிவு காண முயன்றிருக்க வேண்டும். ஆனால், பிகேஆர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

இப்பொழுது, நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு மகாதீரின் ஆளுமை மட்டுமே காரணம் அல்ல என்று இதே ரஃபிசி சொல்லி இருக்கிறார். இதற்கான  மறு மொழியை அடுத்த நாளே கெடா மாநில மந்திரி பெசாரும் மகாதீரின் மகனும் பிரிபூமிக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான டத்தோஸ்ரீ முக்ரிஸ், ரஃபிசிக்கு மறு மொழி கூறியிருக்கிறார்.

“அண்மைய பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வென்று ஆட்சியையும் அமைத்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் வெற்றி குறித்தும், அதற்கு யார் காரணம்; எது காரணம் என்பது பற்றியும் பேசவேண்டிய அவசியமில்லை” என்று செய்தியாளர்களிடம் வருந்தினார் முக்ரிஸ். ஆரம்பத்தில் மௌனமாக இருந்த பிரிபூமி கட்சியின் சார்பில் இப்பொழுது பலரும் ரஃபிசிக்கு எதிராக கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

புதிய கூட்டாட்சியில் கருத்து வேறுபாடு ஏதும் எழுந்தால், அதை மேல்மட்டத் தலைவர்களுடன் பகிர்ந்து சுமூகமான சூழல் நிலவுவதற்கு பாடாற்றாமல்,  எடுத்தேன்.. கவிழ்த்தேன்.. என்ற வகையில் தொடர்ந்து ரஃபிசி கருத்து தெரிவித்து வருவது நல்லதல்ல; கட்சித் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் ரஃபிசி குறித்து மௌனமாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், பிரதமர் பொறுப்பை ஏற்க அன்வார் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மகாதீரும் கருத்து வெளியிட்டிருந்தார். ஆகக் கடைசியாக, அன்வார், “நம்பிக்கைக் கூட்டனியில் ஓற்றுமையும் ஒருமித்த உணர்வும் மங்கியுள்ளது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், ரஃபிசியைக் குறித்து  மட்டும் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

இப்படி, தொடக்கத்திலிருந்தே முரண்பாடு வெளிப்படுவது, அரும்பாடுபட்டு உருவாக்கிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு நல்லதல்ல; இந்த வேளையில் இந்திய அரசியல்வாதியும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ஐநா அமைப்பில் துணை செயலராகப் பணியாற்றியவருமான சசிதருர், “மலேசியாவின் நம்பிக்கைக் கூட்டணி அரசு விழிப்பாக இருக்க வேண்டும்” என்று வெளியிட்ட கருத்தும் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்பட்ட பொருத்தமான கருத்தாகும்.

அண்மைய பொதுத் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை, தேசிய முன்னணியால் மட்டுமே நிலையான ஆட்சியையும் அரசியல் நிலைத் தன்மையையும் நிலைநாட்ட முடியும் என்று அந்த அரசியல் கூட்டணியின் தலைவரும் அந்நாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சொல்லி வந்தார். அம்னோவின் மேல்மட்டத் தலைவர்கள் பலரும் இதையே வலையுறுத்தி வந்தனர்.

அதை மெய்ப்பிக்கும் வகையில், நம்பிக்கைக் கூட்டணியின் தலைமையில் ஆட்சி அமைந்த அடுத்த நாள் முதலே பிகேஆர் சார்பில் சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வேலையைச் செய்பவர் ரஃபிசி ரம்லிதான். தொடக்கத்தில் அமைச்சர் நியமனம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்த ரஃபிசி, இப்பொழுது மூன்றாவது வாரத்தில் நம்பிக்கக் கூட்டணித் தலைவரும் பிரதமருமான மகாதீரை விமர்சித்துள்ளார். இந்த நிலை தொடருவது இந்தக் கூட்டணிக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல. எனவே, ரஃபிசி இனியாவது காளிமுத்து போக்கை கைவிட வேண்டும்; அன்வாரும் அவரை அடக்கி வைக்க வேண்டும்.

  • ஞாயிறு நக்கீரன்