மசூதிகளை மூடி, மதகுருக்களை நாடுகடத்தும் ஐரோப்பிய நாடு

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகின்ற ஏழு மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடுவதோடு, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது.

மைய நீரோட்டத்தோடு இணையாத சமூகங்கள் ஆஸ்திரியாவில் இருப்பதற்கு இடமில்லை என்று விளக்கிய அந்நாட்டின் சான்செலர் செபாஸ்டியன் குர்ஸ், அரசியல் சார்புடைய இஸ்லாமை தடுக்கின்ற நடவடிக்கை இதுவென தெரிவித்திருக்கிறார்.

துருக்கியால் ஆதரவு அளிக்கப்படும் பல மசூதிகள் உள்பட பல இடங்களில் அதிகாரிகளால் புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் உலகப்போரின்போது நிகழ்ந்த கலிபோலி சண்டையை, மூடப்படுகின்ற மசூதிகளில் ஒன்றில் நாடகமாக அரங்கேற்றி நடித்துக்காட்டியது சர்ச்சையை உருவாக்கியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அது குறித்த படங்கள் வெளிவந்திருந்தன.

துருக்கி படையினரைப்போல ஆடை அணிந்து சிறார்கள் அந்த நாடகத்தில் நடித்திருந்தனர்.

இந்த நடவடிக்கை ஆஸ்திரியாவில் தொடர்ந்து நிலவும் இஸ்லாம் மீதான பயம் மற்றும் இனவெறி பிரதிபலிக்கிறது என்று துருக்கி அதிபரின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகங்களை இலக்கு வைத்து இழிவான அரசியல் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். -BBC_Tamil