தேவையில்லாமல் தமிழர்களைச் சீண்டாதே! ஆகம அணிக்கு மலேசியத் தமிழர் களம் கண்டனம்.

பத்துமலைத் திருக்கோயில், ஐயா தம்புசாமிப் பிள்ளை என்ற ஒரு தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழர்களின் நிருவாகத்தின் கீழ், உலகப் புகழ் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனின் திருத்தலமாக இன்று பெருமைகொண்டு நிற்கிறது.

பத்துமலைத் திருத்தலம், மலேசியத் தமிழர்களின் சொத்துடைமையாக திகழ்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது பத்துமலைத் திருக்கோயில் மலேசியத் தமிழர்களின் சொத்து, உடமை என்பதாகும்.

இன்று ஒரு குழுவினர், ‘ஆகம ஆர்மி’ என்ற பெயரில் பத்துமலைத் திருக்கோயிலின் நிருவாகத்தினர், குறிப்பாக அதன் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா மேல் பல குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மலேசிய இந்தியர்களைக் குறிப்பாக தமிழர்களைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையெனில், அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மாறாக, மக்களிடம் குழப்பத்தையும், அதன்வழி தமிழர்களுக்குள் பிளவுகளையும் ஏற்படுத்தும் ஆகம ஆர்மி, தமிழர் உடமையைக் களவாட மிகப்பெரும் சதிவலையைப் பின்னிக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழர் களம் மலேசியா அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அதன் தேசியத் தலைமைப் பொறுப்பாளர் தமிழ்ப்புகழ் குணசேகரன் தெரிவித்தார்.

மேலும், ஆகம ஆர்மியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பத்துமலை கோயிலை முற்றுகையிட்டு, தமிழரின் பெருமைமிகு அடையாளமாகிய அத்திருத்தலத்தை உலகப் பார்வையில் சர்ச்சைக்குரியதாக மாற்ற முனைவதாகவும், இதில் பெண்களைப் பகடைக் காயாக பயன்படுத்த திட்டம் தீட்டியிருப்பதையும் தமிழ்ப்புகழ் சாடினார். இத்தகைய இழிவான செயலை உடனடியாக இவர்கள் கைவிட வேண்டும் என அவர் எச்சரித்தார்.

பத்துமலைத் திருக்கோயிலின் நிருவாகப் பொறுப்பை, இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதுடன்; அதற்கான முயற்சிகளிலும் ஆகம ஆர்மி குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார் தமிழ்ப்புகழ்.

இந்து அறப்பணி வாரியம் அமைந்தால், அது இன்று பினாங்கு மாநிலத்தில் நடப்பதைப் போல் அரசாங்கத்தின் மேற்பார்வையில் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி அரசாங்கத்தின் கீழ் செயல்படுகின்ற சூழல் அமைந்தால் பத்துமலைத் திருக்கோயிலின் நிலம் முதற்கொண்டு அனைத்து சொத்துகளும், நிதி வளங்களும் அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் சென்றுவிடும். தமிழர்களின் சொத்து என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நமது முன்னோர்கள் தேடிவைத்த சொத்துடமை, நமது மடமையால் கைவிட்டுப் போகும். கரகமெடுத்து ஆடவும் கையெடுத்துக் கும்பிடவும் மட்டுமே நமக்கு அங்கு உரிமை இருக்கும்.

கோயில் நிருவாகம் என்பது அரசால் முடிவுசெய்யப்பட்டு அமைக்கப்படும். அப்படி அமைக்கப்படும் தலைமைகள் தமிழர்களின் தலைமைகளாகத்தான் இருக்குமா என்பது கேள்விக்குறியே. வரலாற்றை அறியாததால்தான் தமிழர்கள் மீண்டும் மீண்டும் உரிமைகளையும் உடமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகின் பணக்காரக் கோயிலாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் தமிழ்க் கடவுள் முருகனின் திருக்கோயில் என்பதையும், அது எப்படி திருடப்பட்டது என்பதையும், அதனை இன்று ஆளுபவர்கள் தமிழர்களா என்ற கேள்வியையும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும். திருப்பதி யாரின் தூண்டுதலில் தமிழ் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டது என்பதையும் தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

காமராசர் அணைக்கட்டில் ஊழல் செய்துவிட்டார், தமிழர் நாட்டுக்குத் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட மறுத்துவிட்டார், என்று தமிழர்களைத் தூண்டிவிட்டு அதிகாரத்திற்கு வந்த தமிழர் அல்லாதவரை, இன்றுவரை ஆறு கோடி தமிழர்களால் அப்புறப்படுத்த முடிந்ததா? அவர் இறந்த போது அவரின் சொத்து மதிப்பு என்ன?

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை முன்னிலைப்படுத்தி, தமிழர்களின் சொத்தாகவும், மானமாகவும், சமயமாகவும் விளங்கும் பந்துமலைத் திருத்தலத்தின் மாண்பினை மாசுபடுத்திவிட, இந்தியன் என்ற அடையாளத்தில் வரும் மாற்றானின் உள்நோக்கம்  உணராது, மானத் தமிழர்களே அதற்கு காரணமாகிவிடக்கூடாது.

உலகின் பார்வையில் தமிழர் சமயத்தின் அரசனாக விளங்கும் பத்துமலை முருகனை ஆண்டியாக ஆக்கிவிடாமல் காப்பது மானத்தமிழர்களின் கடமையாகும்.

இழந்ததை மீட்பதைவிடவும் இருப்பதைக் காப்பது முதன்மையானது. ஓநாய்களின் ஒப்பாரிக்கு ஏமாறும் ஆடுகள் அல்ல மலேசிய மானத் தமிழர்கள். தமிழராய் இணைவோம். வெற்றிவேல் வீரவேல். தமிழர் வெல்வது உறுதி.

இதுவரை தனிப்பட்ட முறையில் தன் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த தமிழ்ப்புகழ் குணசேகரன், இம்முறை தான் சார்ந்த இயக்கத்துடன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.