விவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி மீதான வழக்குப்பதிவு முறையா?- வலுக்கிறது ஆர்ப்பாட்டம்

பொதுமக்கள் மத்தியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. அந்த தனியார் தொலைக்காட்சி அரசு கேபிள் ஒளிபரப்பில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்துவரும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் தனியார் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறை, ஜூன் எட்டாம் தேதியன்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.கவின் சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், அ.இ.அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஞானதேசிகன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ. தனியரசு, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகைச் செல்வனால் ஒருங்கிணைக்கப்பட்டது.

பொதுமக்களும் அனுமதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சுற்றின் இறுதியில் திரைப்பட இயக்குனர் அமீர் பேசியபோது கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் கொலைவிவகாரம் தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் பகுதியில் அமர்ந்திருந்த பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் அமீரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர். அமீரைப் பேச அனுமதிக்கக்கூடாது என்று கூறினர்.

இதையடுத்து நிகழ்ச்சி பாதியில் முடிக்கப்பட்டு, விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினர் உதவியுடன் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

puthiyathalaimurai

இந்த நிலையில், அந்த தனியார் அரங்கின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அமீர் மீதும் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் சுரேஷ்குமார் மீதும் கோயம்புத்தூர் பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக அமீர் மீதும் மாணவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்போவதாக தவறான தகவலை அளித்து அனுமதி பெற்றதாக சுரேஷ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக கோயம்புத்தூர் நகர காவல்துறை தெரிவித்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, அரசு கேபிள் சேவையில் இதுவரை 124வது இடத்தில் இடம்பெற்றிருந்த அந்த தொலைக்காட்சி 499வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது.

இந்த நிகழ்வுகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று கூறினார்.

இதையடுத்து இது குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்த விவகாரம் குறித்து அனுமதி கோரியபோதே, காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறினார். இருந்தபோதும் அனுமதியின்றி அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் பல தலைவர்கள் கலந்துகொண்டதால் காவல்துறையினர் அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் நிகழ்ச்சி பாதியில் முடிக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்புடன் தலைவர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.

எடப்பாடி கே. பழனிச்சாமி

மேலும் மாணவர்களை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்தப்போவதாக தெரிவித்துவிட்டு எதிரும் புதிருமான கருத்துகளை பேசக்கூடியவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தியதாகவும் பார்வையாளர்களைப் பதிவுசெய்யவில்லையென்றும் அதனால் அந்த தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கலையரங்கின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியைப் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறிய முதல்வர் பழனிச்சாமி, காவல்துறை விசாரணையின் முடிவில் இந்த வழக்குகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தனது அரசு பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் முன்னுரிமை அளிக்கும் அரசு என்றும் முதல்வர் கூறினார்.

“இது ஊடகங்களின் கழுத்தை நெறிக்கும் செயல்” என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கு தொடர்பாக கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளன.

புதிய தலைமுறை நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டபோது, “நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. செ.கு. தமிழரசன் பேசினார். அமீர் தான் பேசிய சில கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தார். கலந்துகொண்ட பொதுமக்களில் பலர், தலைவர்களோடு சேர்ந்து செல்ஃபிகள்கூட எடுத்துக்கொண்டனர். ஆனால், அடுத்த நாள் மண்டபத்தைச் சேர்ந்தவர்களிடம் வலியுறுத்தி, வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. காவல்துறை குறிப்பிட்டிருப்பதைப்போல, நாற்காலிகள் ஏதும் உடையவில்லை” என்று தெரிவித்தனர்.

மாணவர்களுக்கான நிகழ்ச்சி என அனுமதிபெற்றுவிட்டு, பிறகு எதிரெதிராகப் பேசும் தலைவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளையும் புதிய தலைமுறை நிர்வாகம் மறுக்கிறது. பல நாட்களாக, இதில் கலந்துகொள்ளும் தலைவர்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டதை நிர்வாகம் சுட்டிக்காட்டுகிறது.

தூத்துக்குடி

இந்த நிகழ்வில், பா.ஜ.கவினர்தான் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு குறித்து பா.ஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “இது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த வழக்குகளுக்கு தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றன. சென்னையிலும் சென்னை பிரஸ் க்ளப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

“அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு பிரச்சனையில் தொடர்ச்சியாகத்தான் இங்கு நடப்பதையும் பார்க்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யார் கலந்துகொள்வது, கூடாது என்பதையெல்லாம் அரசு தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டது. தேசிய அளவில் ரவீஷ் குமார், பர்கா தத், ராணா அயூப் ஆகியோருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் குறிப்பிட்ட சக்திகள் அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். ஆங்கிலத்தில் இயங்குபவர்களைவிட, பிராந்திய மொழியில் செயல்படுபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல் இருக்கிறது. தற்போது மத்தியில் இருக்கும் கட்சிக்கு சாதனை என்று சொல்ல ஏதும் இல்லை. ஆகவே, தொலைக்காட்சிகளின் வாயை அடைக்கப்பார்க்கிறார்கள்” என்கிறார் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியரான விஜய்ஷங்கர்.

பா.ஜ.க. அரசின் கட்டளைப்படி தமிழக அரசு நடக்கிறது; அதனால்தான் பா.ஜ.கவினர் கலவரம் செய்தபோதும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது; விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் முதல்வர். அதாவது பா.ஜ.கவின் கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள் என்கிறார் விஜய்ஷங்கர்.

இதற்கிடையில், இந்த விவாத நிகழ்ச்சியில் தான் பேசிய காட்சிகள் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை; அதனால், தன் பக்கத்து நியாயம் தெரியாமல்போய்விட்டது என இயக்குனர் அமீர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: