ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 13 பொலிசார் பலி..

ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்து உள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், அங்கு காந்தகார் மாகாணத்தில், அர்பான்தாப் மாவட்டத்தில் நேஹ்கான் பகுதியில் அமைந்து உள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர்.

அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் பயங்கரவாதிகள், குருவிகளை சுடுவது போல அவர்களை சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர்.இந்த தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.

இந்த தாக்குதலை தலீபான் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை காந்தகார் போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் அது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை ஹெராட் மாகாணத்தில் ஷின்டான்ட் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

-athirvu.in