நஜிப் ஆலோசகர்களுக்கு மாதச் சம்பளம் ரிம200,000?

முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   அவரின்   ஆலோசகர்களுக்கு    மாதச்  சம்பளமாக   ரிம200,000   கொடுத்தாராம்.  சம்பளம்  போக   இதர   சலுகைகளும்   கொடுக்கப்பட்டனவாம்.  த  மலேசியன்   இன்சைட்    செய்தித்தளம்  கூறுகிறது.

நஜிப்புக்குப்   பல    ஆலோசகர்கள்.   அவர்கள்   ரிம70,000- இலிருந்து  ரிம200,000வரை   சம்பளம்   பெற்றதாக    ஒரு   வட்டாரம்   தெரிவித்ததாக  அது  கூறிற்று.

“நாங்கள்   ஆராய்ந்து    பார்த்ததில்   ஒரே  ஒருவருக்கு    மாதச்  சம்பளமாக   ரிம200,000   கொடுக்கப்பட்டிருப்பது    தெரிய  வந்தது.  இது   பிரதமரின்   சம்பளம்போல்  பத்து  மடங்காகும்”,  என    வட்டாரம்   கூறியதாம்.

இவ்வளவு   பெரிய   சம்பளம்  வாங்கியவர்,  “முன்னாள்   அமைச்சர்,  பின்பு   பிரதமர்  அலுவலகத்துக்கு   ஆலோசகராக   மாறியவர்”,  என்று  கூறிய   அச்செய்தித்தளம்    அவரது  பெயரைக்  குறிப்பிடவில்லை.

பக்கத்தான்   ஹரப்பான்   அதிகாரிகள்  முந்தைய   பிஎன்    அரசாங்க   ஆவணங்களை    ஆராய்ந்ததில்    இத்தகவல்கள்     தெரிய   வந்தனவாம்.

ஹரப்பான்   ஆட்சிக்கு   வந்ததை     அடுத்து   அந்த   ஆலோசகர்கள்    காணாமல்   போய்விட்டனர்.

“அவர்கள்  இப்போது   பணியில்   இல்லை.  பிஎன்  தோல்வியைத்   தொடர்ந்து   பலர்   அவர்களின்  அலுவலகத்தை  உடனடியாகக்   காலி    செய்தார்கள்.

“அவர்கள் ஒன்று   சொல்லிக்கொள்ளாமல்    சென்றனர்  அல்லது  விலகிக்கொள்ளுமாறு    கேட்டுக்கொள்ளப்பட்டனர்”,  என்று    அவ்வட்டாரம்   மேலும்   தெரிவித்தது.