வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள், ஜாம்பவான் கூறுகிறார்

ஒரு மாதமே ஆன புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது, தொழிலதிபர் லீ கிம் யூ அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார், குறிப்பாக நாட்டின் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை நிறுத்தும் நடவடிக்கையில்.

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னரே, பிஎன் நிர்வாகத்தை விமர்சித்து வந்த லீ, வெளிநாடுகளில் இருக்கும் இளம் மலேசியர்கள், இப்போது நாடு திரும்பி, நாட்டிற்குச் சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

“மலேசியாவின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் திட்டங்களாலேயே, பலர் இப்பொழுது திரும்பி வர தயாராக உள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.

“நான் லண்டன், சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றபோது, பல இளைஞர்கள் என்னிடம் வந்து, ‘ஐயா, நான் மலேசியாவிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்றனர். இது நல்ல விஷயம்,” என்று அவர் கூறினார்.

“அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிறைய மலேசிய திறமைகள் இருக்கின்றன, நாம் அத்திறமைகளை நாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

“இந்த நாட்டில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களைப் பற்றி நான் பேசவில்லை, வெளிநாட்டில் இருக்கும் நமது மக்கள் நாடு திரும்ப தயாராக உள்ளார்கள் என்றால், RM1 டிரில்லியன் கடனை விரைவில் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.”

இன்று ஶ்ரீ கெம்பாங்காம், பேலஸ் ஓஃப் தி கோல்டன் ஹோர்ஸ் விடுதியில், வசதி குறைந்தோருக்கு ஹரி ராயா நினைவுப்பரிசுகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் லீ பேசினார்.

அந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர், லிம் குவான் எங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.