மக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும்

நல்லிணக்க செயன்முறையின் வெளிப்படுத்தல்கள், போதியளவில் இல்லை என்ற கருத்து, இலங்கை மீது பரவலாகவே காணப்படும் நிலையில், அண்மைய சம்பவங்கள் சில, அவற்றை மறுதலிக்கும் போக்கைக் காட்டி நிற்கின்றன.

தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களைத் தமது அரசியல் செயற்பாட்டால் வெல்ல முடியாத நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளை வைத்தும் ஒருவரையொருவர் புறம்பேசியும் அரசியல் நடத்தலாம் என்ற நிலைப்பாடு ஓங்கியிருக்கையில், தமிழ் மக்களின் எண்ண ஓட்டங்கள் மாறியிருப்பதானது, எதைச் சுட்டிக்காட்ட முனைகின்றது என்பது தொடர்பில், ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குள் எவருக்கும் இல்லாத ஒரு நிகழ்வை, அண்மையில் விசுவமடு மக்கள் நடத்தியிருந்தனர்.

ஜெனீவாவை வைத்தும் இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியடுக்கி அரசியல் நடத்தப்படும் வடக்குப் பிரதேசத்தில், இராணுவ அதிகாரி ஒருவரின் இடமாற்றத்தால் மக்கள் அடைந்த துயரம் என்பது, ஓர் இராணுவ வீரன் என்பதற்கும் அப்பால், அவரால் செயற்படுத்தப்பட்ட மனிதாபிமானம் தொடர்பில் பேசப்பட வேண்டிய தேவையுள்ளது.

இராணுவக் கட்டமைப்புக்குள் மாத்திரம் கேணல் ரட்ணபிரியபந்து செயற்பட்டிருந்தால், மக்கள் மனங்களை வெல்லாத துர்ப்பாக்கியசாலியாக, இன்று அரசியலாளர்களால் சொல்லப்படும் மக்களில் இருந்து, அப்புறப்படுத்தப்பட வேண்டிய இராணுவ வீரராகவே இருந்திருப்பார்.

எனினும் கேணலின் செயற்பாடுகள் மனிதாபிமானத்துக்கு அப்பால், புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகளினதும் அப்பிரதேசத்து மக்களினதும் பொருளாதார மேம்பாடு குறித்துச் சிந்தித்தமையின் தாக்கமும் மீள்குடியேற்றத்தின் பின்னரான காலத்தில் நிர்க்கதியாக இருந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளுமே, தமிழ் மக்களின் கண்ணீரோடு அவரை, விசுவமடுப் பிரதேசத்தில் இருந்து வழியனுப்பியுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள், ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதனூடாக மக்கள் மனதை ஒரு தனி மனிதனாக கேணல் ரட்னபிரியபந்துவால் வெல்ல முடியுமாக இருந்தால், காலாதிகாலமாக நாடாளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இதைச் சாதிக்க முடியாது போனது ஏன் என்பதை அவர்களே மீள் பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

வடக்கில் காணி விடுவிப்புக்காகவும் மீள்குடியேற்றத்துக்காகவும் இன்னும் மக்கள் காத்திருக்கும் நிலையில், நல்லிணக்கப் பொறிமுறைகளை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவையும் அரசாங்கத்தின் முன் விரிந்து கிடக்கின்றது.

சர்வதேச அழுத்தம் என்பதை மாத்திரம் வைத்துப் ‘பூச்சாண்டி’ அரசியல் நடத்துவதையே பிழைப்பாகக் கொண்டுள்ள தமிழ் அரசியலாளர்கள் பொருளாதார ரீதியான கட்டுமானத்தை எவ்வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்க தலைப்படவேண்டிய காலம் வந்துள்ளது.

பசிக்கிறவனுக்குச் சோறுபோட்ட பின்பே, அவனிடம் விடயங்களைக் கூற வேண்டிய நிலையில், சோறுபோட முடியாது; விவசாயம் செய்யக் கற்றுத்தருகின்றேன் எனத் தொடர்ந்தும் கூறிக்கொண்டிருப்போமானால் மக்கள் சோறு கிடைக்கும் திசைநோக்கிச் செல்ல முற்படுவார்கள் என்பதை விசுவமடுவில் பாடமாகக் கற்றுக்கொள்ளவேண்டும்.

கால ஓட்டத்தில், மக்களின் எண்ணப்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து, செயற்பட வேண்டிய நிலை உள்ளதைச் சிந்திக்காத அரசியலாளர்கள், தேர்தலுக்கு மாத்திரம் திக்விஜயம் செய்யும் பிரமுகர்களாகத் தம்மை மாற்றியிருப்பதானது, ஆரோக்கியமானதாக இருக்காது.

இராஜதந்திரச் செயற்பாடுகளில் தம்மைப் பலப்படுத்தும் அரசியல் தலைமைகள், உள்ளூர ஒருவேளைக் கஞ்சிக்கு வழிதேடும் தன் இனத்தின் நிலையறியவும் முற்பட வேண்டும் என்பதை வடக்கில் அண்மையில் நடக்கும் சில சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாணசபையால் எதைச் சாதிக்க முடிந்தது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் பலமாகவே உள்ளது.
இரண்டு தடவைகள் அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்திய மாகாணசபை, பல்வேறான பிரேரணைகளை உருவாக்கியிருந்தது.

எனினும், அந்தப் பிரேரணைகளின் ஊடாக, எதைச் சாதிக்க முடிந்தது அல்லது  நடைமுறைப்படுத்த முடிந்ததா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

இந்நிலையில் போராட்டக் களங்களாக மாறியுள்ள வடக்கு, கிழக்கில் அதற்கான தீர்வை வழங்க முனைப்புக் காட்ட தலைமைகள் விருப்பம் கொள்ளாமையானது, தொடர்ச்சியாக வெறுப்புணர்வையும் அந்நியப்படும் நிலையையும் ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய சூழலில், காணாமல் போனோரது போராட்டங்கள் 500 ஆவது நாளை எட்டவுள்ளன.
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில், வவுனியா போன்ற பிரதேசங்களில் இருந்தும் காணாமல் அக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டுள்ளதை அவதானிக்கக் கூடிய சூழலில், காணாமல் ஆக்கப்பட்டோரை வைத்துச் சிலர் அரசியல் நடத்த முனைவதும் வெறுக்கத்தக்க விடயமாகும்.

அண்மையில், “காணாமல் ஆக்கப்பட்டதாக எவரும் இலங்கையில் இல்லை. வெளிநாட்டு நிதியுதவியில் சிலர் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், அதை மறுத்துரைப்பதற்கு தமிழ்த் தலைமைகளால் முடியாது போயுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டங்கள் கிளிநொச்சி, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக மாறியுள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமொன்றில், ‘நீலன் அறக்கட்டளை’ என்ற பதாகையைத் தாங்கி, அந்தப் போராட்டம் நடாத்தப்பட்டமை பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அந்தப் பதாகையே ஜனாதிபதியின் கருத்துக்கு எதுவானதாகவும் அமைந்திருக்கலாம். எனினும், ஒருசிலர் தமது அரசியலுக்காகவும் தமது உழைப்புக்காகவும் தமது உறவுகளைத் தொலைத்து நிர்க்கதியாக இருக்கும் உறவினர்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக, ஒட்டுமொத்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை.

எனவே, மக்கள் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் அதற்கான தீர்வையோ அல்லது அதற்கு ஏதுவான நடவடிக்கைகளையோ எடுக்க முயலாது, வெறுமனே அறிக்கை அரசியல் நடத்தி வருவார்களேயானால் இராணுவ வீரர்களுக்குத் தமிழ் மக்கள் மாலைபோடும் போது, அவர்களைத் துரோகிகளாகக் கருதமுடியாது என்பதே யதார்த்தம்.

வெறுமனே, ஆபத்தில் இருந்து ஆட்சியாளர்களைக் காப்பாற்றிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களுக்கு ஆபத்து வரும்போது, அதே அரசாங்கத்திடம் பேரம்பேசும் சக்தியை இழந்து நிற்பதானது, பெரும் விசனத்துக்குரியதாகவே உள்ளது.

சுயலாப அரசியல் சித்தாந்தத்துக்குள் சிக்கித்தவிக்கும் தமிழ் அரசியலாளர்கள்,  தனியான பாதையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தளத்துக்குள் ஆழமாகப் பயணிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.

எனினும் அதைவிடுத்து, வெற்றுக்கோசங்களால் மக்களை உசுப்பேற்றும் அரசியல் என்பது வாக்குப்பலத்தை அதிகமாகக் கொண்டுள்ள இளைஞர் சமூகத்திடம் எடுபடாத தன்மையை உருவாக்கும்போது, வடக்கு, கிழக்கில் தேசிய கட்சிகளின் அரசியல் காலூன்றிவிடும் என்பது உண்மை.

எனவே, தமிழ் அரசியலாளர்கள் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் அரசியலைக் கிராமங்களில் இருந்து அவர்களின் தேவையுணர்ந்து செய்யாதவரையில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளின் ஆட்சி அமைவதென்பது சாத்தியமற்றதாகவே போகும் என்பதே நிதர்சனம்.

-tamilmirror.lk

TAGS: