கொக்கரித்த தேர்தல் ஆணையரின் வேதனையான நிலமை !

‘ஞாயிறு’ நக்கீரன்- 61 ஆண்டு கால அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டுவிட்டு, புத்தாட்சியை அமைத்துள்ள நம்பிக்கைக் கூட்டணி, இன்று(ஜூன் 14) 36-ஆவது நாளை எட்டியுள்ளது.

நோன்பு மாதம் இன்றோடு நிறைவு பெற்று நாளை வெள்ளிக்கிழமை நோன்புத் திருநாளைக் கொண்டாட நாடு, குறிப்பாக இஸ்லாமியப் பெருமக்கள் தயாராக இருக்கும் வேளையில், புதிய அமைச்சரவைப் பற்றியும் தேர்தல் ஆணையம் குறித்தும் இன்றளவில் பேரளவில் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

காலம் உள்ள அளவும் கார் உள்ளளவும் தான்தான் தேர்தல் ஆணயத்திற்குத் தலைவர் என்ற தோரணையில் ஆடாத ஆட்டம் ஆடிய முகமட் ஹசிம் அப்துல்லா, இப்பொழுது அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுதந்திர அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் பற்றியும் அது எடுக்கும் முடிவு குறித்து விமரிசனம் செய்யவும் மலேசிய மனித உரிமை ஆணையத்திற்கு(சுஹாகாம்) உரிமை இல்லை எனவும், 14-ஆவது பொதுத் தேர்தல் முடிந்த பின் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து சொன்னவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம கொக்கரித்த அவர், தற்பொழுது  வெகு அடக்கமாக இருக்கிறார்.

அடுத்து, இன்னும் இரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கும் மலேசிய முழு அமைச்சரவை அநேகமாக துணை அமைச்சர்களும் நாடாளுமன்ற செயலாளர்களும் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இந்திய சமுதாயத்திற்கு இன்னும் இருவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும் என்ற கருத்து, மலேசிய இந்திய சமுதாயத்தில் பெரிதும் பிரதிபலிக்கிறது.