மஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா தொடரவேண்டும்

‘ஞாயிறு’ நக்கீரன் – எழுபது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கட்சி; அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வின்றி ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி என்னும் பெருமைகளுக்கு உரிய கட்சி மஇகா. அப்படிப்பட்ட மஇகா.. .., தமிழர்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மஇகா, தமிழர்களின் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்க ஓர் அறவாரியமோ அல்லது தமிழ் வளர்ச்சிக்கான தனி பிரிவோ அல்லது தமிழ்ப் பாதுகாப்பிற்கான குழுவோ என எதைப் பற்றியும் எண்ணிப் பார்த்ததில்லை;

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்புகூட, தமிழர்களுக்கோ அல்லது தமிழ் மொழிக்கோ மட்டும் உரிய கட்சி அல்ல மஇகா என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இப்படிப்பட்ட மனப்பான்மையைக் கொண்டிருக்கும் மஇகா-விற்கு தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பாதுகாப்பு குறித்து சிறப்பு அக்கறை எங்கே இருக்கப் போகிறது?

அதேவேளை, அதன் மேநாள் தலைவர் துன் சாமிவேலு, ஏராளமான எழுத்தாளர்களுக்கு பற்றுக் கோடாக விளங்கினார் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், அது பெரும்பாலும் தன்னை துதி பாடுகிறவர்களையும் தன் ஆதரவாளர்களையும் அரவணைக்கும் போக்காகத்தான் இருந்தது.

அவருக்குப் பின் அந்த நிலையிலும் தொய்வு ஏற்பட்டது. அவர் உருவாக்கிய டத்தோஸ்ரீ கோ.பழனிவேலு ஒரு நூல் வெளியீட்டு விழாவிலோ அல்லது இலக்கிய நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டதாக எந்த செய்தியுமில்லை.

இப்படிப்பட்ட நிலையில், தமிழ் எழுத்தாளர் நலம்-தமிழ் இலக்கிய வளர்ச்சி என்னும் கூறுகளை மையப்படுத்தி அண்மையில் மஇகா ஒரு நல்ல நிலையை எட்டியது. மஇகா-வின் தற்போதைய தலைமையும் மலேசிய எழுத்தாளர் சங்க தலைமையும் ஒன்று சேர்ந்து மாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்ச்சியை நடத்துவது அல்லது ஒரு நூல் வெளியீட்டு விழாவை நடத்துவது என்று எடுத்த நல்ல முடிவுதான் அது.

அதன் அடிப்படையில், மஇகா தலைமையக நேதாஜி அரங்கத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வந்தது. பொதுத் தேர்தல் நெருங்கி வந்த சமயத்தில் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் தேர்தல் களத்தில் மூழ்கினர்.

அந்த வகையில், 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டிருந்த நூல் வெளியீட்டு விழா, தற்பொழுது நிரந்தரமாக நின்று போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பொதுத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற முதல் மத்திய செயலவைக் கூட்டத்திலேயே கட்சியின் நிதி நிலைமை குறித்து கவலையுடன் ஆலோசிக்கப்பட்டது. இதுவரை, தேசிய முன்னணி தலையிலான அரசு அளித்த மானியத் தொகையில் கட்சி நிர்வாகம் தொய்வின்றி நடைபெற்று வந்தது. தற்பொழுது அந்த  வாய்ப்பு இல்லாத நிலையில், கட்சியை வழிநடத்த தேவையான நிதி ஆதாரம் குறித்து ஆழமாக சிந்திக்கும் நிலையில் கட்சி இருப்பதாக அறிவித்தனர். அறுபது ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தக் கட்சி, அரச அதிகாரம் கை நழுவிப் போன இரு வாரங்களிலேயே நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டது.

இப்படிப்பட்ட மஇகா, இனியும் மாதாந்திர  நூல் வெளியீட்டு விழாவை நடத்தி தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவிக் கரம் நீட்டுமா என்பது ஐயமே!

இருப்பினும் மஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா தொடரவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கும்.