யெமனில் உணவின்றி 80 இலட்சம் மக்கள்: 25 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம்!

யெமனில் தீவரமடைந்து வரும் உள்நாட்டு போரினால், சுமார் 80 இலட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இன்று (16.06.2018) சனிக்கிழமை ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யெமனின் மொத்த மக்கள் தொகையான 2 தசம் 7 கோடி பேரில் சுமார் 80 லட்சம் பேர் பட்டினியால் பரிதவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யெமனில் ஹுத்தி கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஹொடாய்டா துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினை இலக்கு வைத்து சவூதி ஆதரவு பெற்ற இராணுவம் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் உக்கிரமான தாக்குதல்களினால், யெமன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

இந்த மோதல்கள் காரணமாக, உணவு பொருட்கள், மருந்துகள் இறக்குமதி தடைபட்டுள்ளதால் கடும் தட்டுப்பாடு நிலவுவவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அல்-குடாய்டா துறைமுகம் மீதான தாக்குதலை கைவிடுமாறு ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ள போதிலும், இருதரப்பினரும் ஏற்க மறுத்து சண்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேநிலை தொடருமாயின், குறித்த துறைமுகத்தை சுற்றி வசிக்கும் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

-athirvu.in