யாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாகவும், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரும், அவருடன் நின்ற சக உத்தியோகத்தரும் போதையில் (கஞ்சா) இருந்ததாகவும் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மல்லாகம் சந்திக்கு அருகாமையிலுள்ள சகாயமாதா கோவிலின் திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டினால் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பலியானவர் பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சடலம் தற்பொழுது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில்.,

சகாயமாதா கோவிலின் திருவிழாவிற்கு சென்று விட்டு வீதியில் குறித்த சம்பவத்தில் இறந்த இளைஞன் இருசக்கர வாகனத்தில் வீதியில் வந்துகொண்டிருந்த நிலையில் வழிமறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், குறித்த இளைஞனுக்கும் ஆவா குழுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் தெரிவித்ததோடு.

உயிரிழந்த இளைஞனுக்கும், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கும் இடையில் முன்விரோதமிருந்ததாகவும், அதுமட்டுமின்றி குறித்த பொலிஸார் போதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தொடர்கிறது.

பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, துப்பாக்கிச் சூடு நடத்திய சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன், சடலத்தையும் நேரில் விசாரணை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் ஸ்ரீலங்கா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

-athirvu.in

TAGS: