போலீஸ்: நஜிப் கோல்ப் விளையாட வந்தார், ஓடிப்போவதற்காக அல்ல

 

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா நாட்டை விட்டு ஓடிப்போக முயற்சிக்கிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வதந்திகளை கெடா போலீஸ் தலைவர் ஸைனால் அபிடின் காசிம் நிராகரித்தார்.

அவர்கள் இருவரும் நேற்று 30 மூட்டை முடிச்சுகளுடன் லங்காவி தீவுக்கு வந்த சேர்ந்த படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாயிற்று.

நஜிப்பும் அவரது குடும்பத்தினரும் விடுமுறையைக் கழிக்க லங்காவிக்கு வந்தனர். அவர்கள் கெடா முன்னாள் கெடா மந்திரி பெசார் (அஹமட் பாஷா முகம்ட் ஹனிபா) மற்றும் இதர தலைவர்களைச் சந்தித்தனர் என்று கூறிய ஸைனால், இது வழக்கமான சந்திப்பு என்பதுடன் அவர் இத்தீவில் இரண்டு நாள்களாக கோல்ப் விளையாடியுள்ளார் என்றார்.

இம்மாதிரியான வதந்திகளைப் பரப்பக்கூடாது, ஏனென்றால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ஸைனால் மேலும் கூறினார்.

மே 9 பொதுத் தேர்தலில் பாரிசான் தோல்வியட்டைந்ததைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் நஜிப்பும் ரோஸ்மாவும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்தது.

இதனிடையே, நஜிப்பும், அவரின் மகன்களின் ஒருவரும் மற்றும் நண்பர்களும் மீன் பிடிக்கும் உல்லாசப் பயணம் மேற்கொள்ள ஒரு படைகை ஏற்பாடு செய்திருந்ததாக சைனா பிரஸ் கூறியிருந்தது.

ஆனால், அத்திட்டம் பருவநிலை சரியில்லாததால் கைவிடப்பட்டது.