மன்சூர் அலிகானை விடுதலை செய்யுங்கள்.. எஸ்.வி.சேகரை கைது செய்யுங்கள்: பாரதிராஜா அறிக்கை

சென்னை: சேலம் பசுமைவழிச் சலை பற்றி பேசியதற்காக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகானை விடுதலை செய்யுங்கள். தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகரைக் கைது செய்யுங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்துவருகிறார். அவரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை.

அண்மையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சேலம் 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தைப் பற்றி பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா, தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் சார்பாக இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தற்போது தமிழகம் தினமும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்று ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது. நம் தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்வதால் தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவர் தனது அறிக்கையில், “சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பேச்சு தவறு தான். உணர்ச்சி மேலிடும் போது கோபம் வெளிப்படுவது இயல்பு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவசர அவசரமாக, அவரை வீட்டிலேயே கைது செய்ய முனைந்த காவல் துறை, பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுப்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்திய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவருடைய அறிக்கையில், “உடனடியாக கைது செய்ய வேண்டிய எஸ்.வி.சேகரை விட்டுவிட்டு மாறாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறீர்கள். தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்தால் உண்மையான ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையென்றால் இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

மன்சூர் அலிகான் தன் வீட்டிற்கோ, தன் சொந்தத்திற்கோ குரல் கொடுக்கவில்லை, மக்களின் நலனிற்காகவே பேசினார். ஆகையால் அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள். இல்லையென்றால், எஸ்.வி. சேகரை கைது செய்து, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்று பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com