துன்  மகாதீருக்கு  நேர்ந்த  சோதனைகள்

  • கி.சீலதாஸ், ஜூன் 20, 2018.       

 

துன்‌ டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையிலான நம்பிக்கை கூட்டணி 14ஆம்‌ பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அது சமாளிக்க வேண்டிய இடர்பாடுகள் ஜனநாயக முறைக்கு எதிரானவை என்றால் மிகைப்படுத்துவது அல்ல. முதலில் மகாதீரைப் பிரதமராக நியமிக்கும் வேளை காட்டப்பட்ட தாமதம் இதுகாறும் கண்டிராததாகும். இதில் விசித்திரம் என்னவெனில் இது விஞ்ஞான யுகம்    என்பதைச்  சம்பந்தப்பட்டவர்கள்  மறந்தது.  ஒவ்வொரு பொது நிகழ்ச்சியும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இயல்பாகிவிட்ட  காலம்  இது.   அரண்மனை  நிகழ்வுகள்  உலகக் காட்சிளாக  மாறின.

மகாதீர்தான் நாட்டின் பிரதமர் என நம்பிக்கை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத்  தேர்ந்தெடுத்தப்போதிலும் அவரது  உறுதிமொழி ஏற்கும்  நிகழ்ச்சி தாமதப்படுத்தியதற்கான  காரணம் என்ன? தேர்தல் ஆணையம் காட்டிய மெத்தனமா?  தயக்கமா? வந்துகொண்டிருந்த முடிவுகளைத்  தேர்தல் ஆணையத்து தலைவரால் நம்பமுடியவில்லையா? அல்லது  ஏற்கமுடியவிலையா? தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியைத் தந்திருக்கலாம் என்பார்கள். நடுநிலை வகிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் அதிர்ச்சிப் பெறுவதற்கு  யாதொரு  காரணம்மும்  இருக்க  வழியில்லை.  வந்து  கொண்டிருந்த  முடிவுகளை அறிவிக்க வேண்டியது    ஆணையத்தின்  பொறுப்பு. அதைவிடுத்து தாமதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டதானது தேர்தல்  ஆணையத்தின்  தலைவர் மீது சந்தேகத்தைக் கிளப்பியது.

தேர்தல் பார்வையாளர்கள் ‌‌‌இதைப்பற்றி கூறும் பொழுது, தேர்தல் ஆணையத் தலைவரின் பின்னணியானது அவர் முன்னால் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீபின் நெருக்கமானவர்களில் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. அது ஒரு புறம் இருக்க, பொதுத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தேசிய முன்னணி மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்களை வெறுப்பில் ஆழ்த்தியது எனலாம்.   இந்த வெறுப்பலையைச் கிஞ்சித்தும்   கவனிக்கத்  தவறியவர்களைத்தான்  காணமுடிந்ததே தவிர  அதிகாரப்  பீடத்தில்  அமர்ந்திருந்தவர்கள்  மக்களின்  உண்மையான     மனநிலையை   புரிந்துகொள்ள  தவறினர்  என்பதும்  தெளிவாயிற்று.

ஆட்சி மாற்றத்தின் போது நஜீப் ரசாக்கும் அவரைச் சார்ந்தவர்களும், மற்றவர்களும் காட்டிய மெத்தனம் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க  மறுப்போரை  அடையாளம்  காட்டியது.  நாடாளுமன்ற  ஜனநாயகத்தை அவமதிக்கத் தயங்காதவர்களைக் காணமுடிந்தது.

பிரதமர் பொறுப்பை ஏற்ற மகாதீரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் நாட்டின் தலைமை வழக்குரைஞரைப் பற்றியதாகும். நஜீப்பால் நியமிக்கப்பட்ட டான் ஸ்ரீ அப்பாண்டியின் போக்கு நாட்டுக்கு அவப்பெயரைத்தான் ஈட்டித்தந்ததே அன்றி  அவரே ஒரு நடுநிலைவாதி என்று சொல்ல முடியவில்லை. புதிய நம்பிக்கை முன்னணி ஆட்சியில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அவருக்குப் பங்கு இருக்காது என்பது அவருக்கே தெரியும், அல்லது தெரிந்திருக்க வேண்டும். ஆனால்,  நஜீப்பால் நியமிக்கப்பட்டவர் அவரின் விசுவாசம் யாரிடம் இருக்கும்?

நஜீப்பின் ஊழலைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது அப்பாண்டி மட்டும் அதை ஏற்க மறுத்தது மட்டுமல்ல, நஜீப் குற்றமற்றவர் என்று நற்சான்றிதழும் வழங்கினார். மகாதீரின் நிர்வாகத்திற்கு இது ஒரு பெரும் சவால். அப்பாண்டியை விடுப்பில் போகும்படி செய்தார்  மகாதீர். அடுத்து, பிரபல வழக்குரைஞர் தோமி தோமஸை (Tommy Thomas) நாட்டின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கும் பொருட்டு  மன்னருக்கு ஆலோசனை வழங்கினார்.  நடந்து என்ன?

தோமஸை தலைமை வழக்குரைஞராக நியமிக்காமல் ஒரு மலாய்க்கார முஸ்லிமை தேர்வு செய்ய வேண்டும் என்ற பதில் அரண்மனையிலிருந்து வந்தது. பேரரசர் இப்படிப்பட்ட ஓர்‌ ஆலோசனையை பிரதமரிடம் சொல்லலாமா? அல்லது அப்படிப்பட்ட ஒரு நிபந்தனையைத்தான் முன்வைக்கலாமா? இது அரசமைப்புச் சட்டப்‌ பிரச்சினை. அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? அதுவல்லவா முக்கியம்?

அரசமைப்புச் சட்டத்தின் 145(1)ஆம் பிரிவின்படி பிரதமர் ஆலோசனைக்கு இணங்க தலைமை வழக்குரைஞரை மாமன்னர் நியமிக்க வேண்டும். இதன் பொருள் என்ன? பிரதமர் யாரை அடையாளம் காட்டித்  தலைமை வழக்குரைஞராக நியமிக்க வேண்டும் ‌‌‌‌‌‌‌‌‌என்று  ஆலோசனை  வழங்குகிறாரோ அவரைத்தான் மாமன்னர் நியமிக்கவேண்டும். மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை, என்பது மட்டுமல்ல,   வேறொருவரின்  பெயரைத்  தரும்படி கோரும்  விருப்புரிமை  மாமன்னருக்குக் கிடையாது.

அரசமைப்புச் சட்டம் தெளிவாக இருக்கும் போது அதைக் குழப்புவது சரி அல்லவே!

மாமன்னர் ஆட்சியாளர்களின்  ஆலோசனைப்  பெறுவதற்காக அவர்களின்   கூட்டத்திற்கு ஏற்பாடு ‌‌‌செய்யப்பட்டுள்ளதாக அரண்மனையிலிருந்து செய்தி வந்தது. 145(1)ஆம் பிரிவின்படி தலைமை வழக்குரைஞரின் நியமனத்தில் யார் சம்மந்தப்படலாம் என்பது     பட்டவர்த்தமாக  இருக்கும்போது  ஆட்சியாளர்களின் ஆலோசனை என்பது அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத, அனுமதிக்கப்படாத  ஓர் அணுகுமுறையாகும். நாட்டில் உள்ள பல அரசமைப்புச் சட்ட நிபுணர்கள், முன்னாள் மலேசிய தலைமை நீதிபதி  துன்   சாக்கி   உட்பட, மகாதீரின் நியமனம் சரியானது என்றனர்.  இந்தச் சர்ச்சை முடிவு பெறாத போது ஒரு சிலர் இலவச ஆலோசனையை நல்கவும் தயங்கவில்லை.

அப்பாண்டியின் நீக்கம், தோமஸின் நியமனம் ஆகிய இரு நடவடிக்கைகளைப் பற்றி பிற ஆட்சியாளர்களோடு கலந்து ஆலோசிப்பது நல்லது என்ற ‌‌‌‌‌‌கருத்தும், தலைமை வழக்குரைஞர் ‌‌‌குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கவேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட ஆலோசனைப் பரிமாற்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாமேயன்றி 145(1)ஆம் பிரிவைப்‌ பார்க்கும் போது, இவை தேவையற்ற கருத்துகள்.  அதுமட்டுமல்ல,  புதுவிதமான  அணுகுமுறைக்கு  வித்திடுவதுபோல்  இருந்தது.  இவை  ஏற்புடையவை  அல்ல.

நல்லவேளையாக அரண்மனையில் விவேகம் மேலிட்டது, பிரதமர் மகாதீரின் ஆலோசனைக்கு மதிப்பளிக்கப்பட்டது.  தோமி  தோமஸ்  நாட்டின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.  சட்டச் சிக்கல் தவிர்க்கப்பட்டது. ஆனால் ஒன்று, ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்தப்‌ பிரச்சினை எழுந்திருக்கக்கூடாது. எழுந்து விட்டது, இனிமேலும் இதுபோல்  சிக்கல்களை கிளப்பாமல் பார்த்துக் கொள்வது விவேகத்தின் அறிகுறி.

இந்தப்  பிரச்சினைக்குத்  தீர்வு  காணப்படாமல்  இருந்தால்  அதன்  பின்  விளைவுகள்  எப்படி  இருந்திருக்கும்  என்று  அனுமானிக்க  முடியவில்லை.  சட்டம்  இருக்கும்போது  அதைப்  பின்பற்றுவதுதான்  விவேகமே  அன்றி  குழப்பங்களுக்கு  இடமளிக்கக்கூடாது.