கிட் சியாங்: தவறான செயல்களை குவான் எங் அம்பலப்படுத்தியதில் தவறேதும் இல்லை

 

முந்திய நிருவாகத்தின் ஊழல்கள் மற்றும் தவறான செயல்களை நிதி அமைச்சர் குவான் எங் அம்பலப்படுத்தியதில் தவறேதும் இல்லை என்று இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார்.

தவறான செயல்கள் பற்றிய தகவல்களைப் பெற்றிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்கள் அவற்றை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் தேவையை டிஎபியின் மூத்த தலைவர் கிட் சியாங் வலியுறுத்தினார்.

நிதி அமைச்சர் குவான் தவறான செயல்களை அம்பலப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதோடு இந்நாட்டில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு உறுதிகள் அளிக்க வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கூறியிருந்தது பற்றி கருத்துரைக்குமாறு கேட்டுக் கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

“ஒரு புதிய மலேசியாவை உருவாக்குவதற்கான தேவை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். கடந்த கால தவறுகளை நாம் மாற்றியாக வேண்டும்”, என்று கிட் சியாங் ஒரு பொதுவான பதிலை அளித்தார்.

“எனது கடந்த 52 ஆண்டுகளில், நான் அனைத்து தவறுகளையும் அம்பலப்படுத்தியுள்ளேன். அதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

“எடுத்துக்காட்டாக, மலேசியாகினி அதனிடம் தகவல் இருந்தால் அதை அம்பலப்படுத்தும். அதை அமைச்சர் மூடிமறைத்தால் அவர்கள் அவரை குறைகூறக் கூடும்”, என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

ஆஸ்ட்ரோ அவானியுடன் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில் குவான் எங்கின் நிதி அமைச்சர் பதவி எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதால், அம்பலப்படுத்தும் விவகாரங்களை அவர் மற்ற அமைச்சர்களிடம் அல்லது இதர அரசு அமைப்புகளிடம் விட்டு விட வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

அன்வாரின் கருத்துக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் குவான் எங், தவறான செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மகாதிர் பிறப்பித்திருந்த உத்தரவை தாம் பின்பற்றியாத அவர் கூறினார்.

நமது அமைச்சுகள் திறமையாகச் செயல்பட்டு வருகின்றன. நிதி அமைச்சு மட்டுமல்ல, கல்வி அமைச்சும், மனிதவள அமைச்சும் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ள என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

இதனைச் செய்வதன் வழி, தவறைத் திருத்த முடியும்; புதிய மலேசியாவை உருவாக்க முடியும் என்று கிட் சியாங் தீர்க்கமாகக் கூறினார்.