அல்தான்தூயாவின் போலிஸ் அறிக்கையில், நஜிப்பின் முன்னாள் உதவியாளர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபூவுவின் கொலை வழக்கு தொடர்பான போலிஸ் விசாரணையின் புதிய அறிக்கையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு உதவியாளராக இருந்த மூசா சஃப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்தான்துயாவின் தந்தை செடேவ் ஷாரிபூவால் அப்போலிஸ் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுவரை அந்த அறிக்கையில், சந்தேக நபராக வேறு யாரும் பெயரிடப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் வலியுறுத்தினார்.

முசா, முன்னாள் போலீஸ் கமாண்டர் அஸிலா ஹட்ரி மற்றும் சீருல் அஷர் உமர் ஆகியோரின் உயரதிகாரி ஆவார்.

முன்னதாக, நஜிப்பின் நெருங்கிய நண்பரான ரஸாக் பங்கிண்டாவைச் சந்திக்க, அஸிலா மற்றும் சிருலிடம் மூசா கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ரஸாக் பகிண்டா தனது காதலி அல்தான்துயாவால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதால், போலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதுவரை, மூசா சாட்சியமளிக்க அழைக்கப்பட்டதில்லை, 2015-ல் பெடரல் நீதிமன்றம் இவ்வழக்கில் அவரது அறிக்கை முக்கியமானது அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது.

“மூசா பணிக்காமல் இருந்திருந்தால், ரஸாக்கின் வீட்டிற்கு (அக்டோபர் 19, 2016) அஸிலா மற்றும் சிரூல் சென்றிருக்க மாட்டார்கள், என் மகள் இன்று உயிரோடு இருந்திருக்கலாம் என நான் நம்புகிறேன்,” என்று சேடேவ் தனது போலிஸ் அறிக்கையில் தெரிவித்தார்.

“யாரோ ஒரு தரப்பினர் என் மகளைக் கொல்லச் சொல்லி, அஸிலாவிடமும் சிரூலிடமும் பணித்திருக்கிறார்கள், ஆக இக்கொலையில் அவர்களும் குற்றவாளிகள் என நான் நம்புகிறேன்.

“மூசாவை விசாரணைக்கு அழைக்காததால், என் மகள் கொலைக்கான நோக்கம் நிரூபிக்க முடியாமல் இருக்கிறது, இது உண்மையை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது,” என்று சேடேவ் மேலும் சொன்னார்.

ரஸாக்குடன் சந்திப்பை ஏற்பாடு செய்ததைத் தவிர, கூடுதலாக மூசாவிற்கு இந்த வழக்கில் வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்று இதற்கு முன்னர் அஸிலா நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதற்கிடையில், மூசாவின் பெயர் மட்டுமின்றி, அல்தாந்துயா உடலை வெடிக்கப் பயன்படுத்திய வெடிகுண்டு, அஸிலாவுக்கும் சிரூலுக்கும் எப்படி கிடைத்தது, அதைக் கொடுத்தவருக்கும் இக்கொலையில் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டுமென, சேடேவ் காவல்துறையைக் கேட்டுக் கொண்டனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்த ரஸாக்கின் விடுதலைக்கு எதிராக, மேல்முறையீடு செய்யாதது பற்றியும் சேடேவ் கேள்வி எழுப்பினார்.

போலீஸார் விசாரணையை ஆரம்பித்தால் மட்டுமே, வழக்கு தொடர்பான புதிய தடயங்களை வெளியிட முடியுமென ராம்கர்ப்பால் முன்பு கூறியிருந்தார்.