ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல், 30 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். அதனை ஏற்று முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர். அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை.

மாறாக ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து பரிமாறியதோடு, தலீபான்கள் பொதுமக்களுடன் ‘செல்பி’ படங்களும் எடுத்துக்கொண்டனர். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அதிபர் அஷரப் கனி அறிவித்தார். அதிபரின் இந்த முடிவை அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன. ஆனால் ரம்ஜான் பண்டிகை முடிந்து விட்டதால் மீண்டும் ஆயுதங்களை ஏந்த தலீபான்களுக்கு அந்த அமைப்பு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் “போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை. சூரிய உதயத்திற்கு முன்னர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தலீபான்கள் வெளியேற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அரசு தரப்பு போர் நிறுத்தம் அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என்றும், அதே சமயம் பாதுகாப்புபடை வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறபோது தங்களை தற்காத்துக்கொள்ள எதிர் தாக்குதலை நடத்தலாம் என்றும் அதிபர் அஷரப் கனி அறிவித்தார். ஒரு தரப்பு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு தரப்பு போர் நிறுத்தம் தொடருவதாகவும் அறிவித்திருப்பதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.

இந்நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதலாவது கொலைவெறித் தாக்குதலை தலிபான் பயங்கரவாத இயக்கம் முன்னெடுத்து உள்ளது. ஆப்கானிஸ்தானின் பட்கிஸ் மாகாணத்தில் இரண்டு பாதுகாப்பு படை சாவடிகள் பயங்கரவாதிகள் பல்வேறு திசைகளில் இருந்து வந்து திடீர் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர், இத்தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 30 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

-dailythanthi.com