காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) எனும் அமைப்பு கூறியுள்ளது.

இளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண்பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் ITJP குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் 18.05.2009ஆம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது குடும்ப படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் போரின் இறுதிக் காலகட்டத்தில் காணாமல் போனோர் குறித்த ITJP இன் பெயர்ப் பட்டியல் தமது கவனத்தை ஈர்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கைப் படையினரின் காவலில் இருந்தபோது காணாமலாகக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்ட இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர்ப் பட்டியல் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது என இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர்ப் பட்டியல் 351 பெயர்களைக் கொண்டுள்ளது. சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட குடும்பங்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை நாடாளுமன்ற சட்டம் ஒன்றினால் (2017ஆம் ஆண்டின் 09ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்கச் சட்டம்). காணாமல் போனோர் குறித்து கண்டறிவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள பெண் (கோப்புப் படம்)

காணாமல்போன நபர்களைத் தேடுதல், கண்டறிதல், குறித்த நபர்கள் எந்தச் சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்தல், அவர்களது தலைவிதி, காணாமல் போகும் சம்பவங்களைக் குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல், காணாமல் போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களைப் பாதுகாத்தல், காணாமல் போன நபர்கள் அல்லது உறவினர்களுக்கு வழங்கக் கூடிய முறையான நிவாரணங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும், சுந்திரமானதுமான அமைப்பாக இது கருதப்படுகிறது.

எனவே, தொடர்பான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமல் போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் விரிவான தகவல்கள், கிடைக்கும் பட்சத்தில் அவற்றை அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தச் சட்டத்தின் 27ஆம் பிரிவினால் விவரிக்கப்பட்டுள்ள வகையில் காணாமல் போயுள்ளதாகக் கருதப்படும் பாதுகாப்புப் படையினர், போலீசார் உள்ளடங்கலான ஏதேனும் நபர்களின் வேறு விபரங்கள், தகவல்கள், எவரிடமும் அல்லது எந்த அமைப்பிடமும் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தகவல்களை நாவல, நாரேஹேன்பிட வீதியில் அமைந்துள்ள ”காணாமல் போனோருக்கான அலுவலகத்தில்” அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. -BBC_Tamil

TAGS: