ஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்?

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் குழு ‘அரசியல் பாகுபாடு மிகுந்த சாக்கடைக் குழி’ என்று கூறி அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுபவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து பிரித்து தடுப்பு மையங்களில் வைத்திருப்பதாக அமெரிக்கா விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் சூழலில் அமெரிக்காவின் இந்த விலகல் நிகழ்ந்துள்ளது.

“பாசாங்குத்தனம் மிகுந்த இந்த தன்னாட்சி அமைப்பு, மனித உரிமைகளை எள்ளி நகையாடுகிறது,” என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் குறை கூறியுள்ளார்.

2006இல் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு மனித உரிமைகளை மீறும் நாடுகளையே உறுப்பினர்களாகக் கொண்டுள்ளதாக விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் ஹுசைன் அமெரிக்கா விலகியுள்ளது வியப்பளிக்காவிட்டாலும் ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். எனினும், இஸ்ரேல் அமெரிக்காவின் முடிவை பாராட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழு என்பது என்ன?

ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கலைக்கப்பட்டு, 2006இல் ஐ.நா மனித உரிமைகள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 47 நாடுகள் உறுப்பினர்களாக, மூன்றாண்டு காலத்துக்கு தேர்வு செய்யப்படும்.

ஆண்டுக்கு மூன்று முறை கூடும் இந்தக் குழு, ஐ.நாவின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் சூழலை சீராய்வு செய்யும்.

தனிப்பட்ட வல்லுநர்களையும், விசாரணைக் குழுக்களையும் மனித உரிமைகள் மீறல் நடக்கும் நாடுகளுக்கு இந்தக் குழு அனுப்பும்.

அமெரிக்கா விலகியது ஏன்?

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது 2009இல் இந்தக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டது அமெரிக்கா. பின்னர் 2012இல் மீண்டும் தேர்வானது.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி

சீனா, ரஷ்யா, சௌதி அரேபியா, அல்ஜீரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் 2013இல் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதும் பல மனித உரிமை அமைப்புகள் இந்தக் குழுவை விமர்சித்தன.

அதே ஆண்டில், தங்கள் மீது நியாயமற்ற விமர்சனங்களை இந்தக் குழு எழுப்புவதாகக் குற்றம் சாட்டி அதன் சீராய்வுக் கூட்டம் ஒன்றை இஸ்ரேல் புறக்கணித்தது.

பாலத்தீனப் பிரதேசமான மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகள் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் குழு முடிவு செய்தபின் இஸ்ரேல், 2012இல் இந்தக் குழுவுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டது.

Israel

வெனிசுவேலாவில் நிகழும் அரசியல் கொந்தளிப்பில் பல போராட்டக்காரார்கள் கொல்லப்பட்டும் அந்நாட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்காமல், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதை ஒப்புக்கொள்ளவது கடினமானது என்று 2017இல் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

பாலத்தீன விவகாரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால் இந்தக் குழுவால் தொடர்ந்து விசாரணை செய்யப்படும் நாடாக இஸ்ரேல் மட்டுமே உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழுவில் இருந்து விலகியுள்ளதால் மனித உரிமைகளை காக்க தங்களுக்கு இருக்கும் பொறுப்பில் இருந்து பின்வாங்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் அமெரிக்கா விலகியுள்ளதற்கு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. சில நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளும் இத்தகைய ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

நியூயார்க்கில் இருந்து செயல்படும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. -BBC_Tamil