தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய உலோகம் மற்றும் மறுசுழற்சி வர்த்தக சங்கம் நம்பிக்கை நிதிக்கு ரிம50,000 வழங்கியது

 

நேற்று மாலை பிரிக்பீல்ட்ஸ் த டிவைன் உணவகத்தில் நடைபெற்ற ஒரு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய உலோகம் மற்றும் மறுசுழற்சி வர்த்தக சங்கம் மலேசிய நம்பிக்கை நிதிக்கு ரிம50,000-ஐ நன்கொடையாக வழங்கியது.

அச்சங்கத்தின் ரிம50,000-க்கான மாதிரி காசோலையை அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மனிதவள அமைச்சர் மு. குலசேகரனிடம் வழங்கினார்.

காசோலையை வழங்குவதற்கு முன்னர் பேசிய அச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உலோகம் மற்றும் மறுசுழற்சி தொழில் தொழிலாளர் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க ஏழு வருட காலம் போராடியும் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி, இந்திய தமிழகத்திலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வர மனிதவள அமைச்சர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நன்கொடையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் குலசேகரன், தொழிலாளர் பற்றாக்குறை, வெளிநாட்டு தொழிலாளர்கள் படை எடுப்பு ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது என்றும் அதைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு சிங்கப்பூர் முறையைப் பின்பற்றுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவதில் நடக்கும் கொல்லைப்புற வழிகளைச் சற்று விளக்கிய அமைச்சர், தம்மால் இயன்றதைச் செய்யப் போவதாக உறுதி அளித்தார்.

மேலும், ஊழல் வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.