அதிகமான வெளிநாட்டு தொழிளார்கள் நாட்டிற்குள் புகுந்திருப்பது குறித்து ஸாகிட் விசாரிக்கப்பட வேண்டும்

 

முறையான பத்திரங்கள் இல்லாமல் நாட்டிற்குள் புகுந்திருக்கும் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை, இந்த விவகாரம் குறித்து போலீஸ் புகார் செய்த பார்டி எக்கோனமி ராக்யாட் மலேசியா-வின் (பெர்கிரா) தலைவர் முகமட் ரிட்ஸுவான் அப்துல்லா, முன்னாள் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியாவை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார்.

டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகாரை தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முகமட் ரிட்ஸுவான் இதில் சம்பந்தப்பட்டுள்ள ஏஜென்ட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

2012 ஆம் ஆண்டிலிருந்து அவரது அரசுசாரா அமைப்பு இக்லாஸ் இந்த விவகாரம் மீது போலீசில் ஏராளமான புகார்கள் செய்துள்ளதோடு அரசாங்கத்திற்கும் மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால், முந்தைய அரசாங்கம் இந்த விவகாரத்தைத் தீர்க்கத் தவறிவிட்டது என்றாரவர்.

இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) ஆதாரங்கள் வழங்கவும் தயாராக இருப்பதாக பெர்கிரா தலைவர் கூறினார்.

நாங்கள் எம்எசிசியுடன் ஒத்துழைக்கவும் ஆதாரங்களை அளிக்கவும் தயார் என்று கூறிய அவர், “எங்களுக்கு அழைப்பாணை அனுப்பும்படி எம்எசிசிக்கு நாங்கள் சவால் விடுகிறோம்”, என்றார்.

இந்த விவகாரம் குறித்து புதிய உள்துறை அமைச்சர் முகைதின் யாசினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.