பிரதமர் மேலும் 15 அமைச்சர்களின் பெயரை அகோங்கிடம் தாக்கல் செய்துள்ளார்

பிரதமர் மகாதிர் இன்னும் 15 அமைச்சர்களை நியமிப்பதற்கு அவர்களின் பெயர்களை பேரரசர் சுல்தான் முகம்மட் v-திடம் தாக்கல் செய்துள்ளார்.

பெயர் பட்டியல் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டதாக அரசாங்க வட்டாரம் கூறுகிறது.

மொத்தம் 28 அமைச்சர்கள் இருப்பார்கள், சாபா மற்றும் சரவாக் ஆகிய ஒவ்வொன்றிலிருந்து இரு அமைச்சர்கள் இருப்பார்கள். துணை அமைச்சர்களும் செனட்டர்களாக நியமிக்கப்படவிருப்பவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. என்று மலேசியாகினி அறிகிறது.

ஆனால், எத்தனை துணை அமைச்சர்கள் மற்றும் செனட்டர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

அமைச்சர் பதவிக்கு பிகேஆரின் சைபுடின் அப்துல்லா, அமனாவின் காலிட் சாமாட் மற்றும் டிஎபியின் தெரசா கோக் மற்றும் ஓங் கியன் மிங் ஆகியோர் பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.

சைபுடின் வெளிவிவகார அமைச்சராகவும், ஓங் அனைத்துலக வாணிப அமைச்சராகவும் நியமிக்கப்படுவர் என்று மலேசியாகினி அறிந்துள்ளது.

இன்று காலை மலேசியாகினிவுடனான நேர்காணலில் மனிதவள அமைச்சர் மு. குலசேகரன் பெயர் பட்டியல் பேரரசரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பிரதமர் தங்களிடம் கூறியதாகத் தெரிவித்தார்..

இந்தியச் சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கையாளுவதில் தமக்குள்ள வேலைப் பளுவைக் குறைப்பதற்கு இன்னொரு இந்திய அமைச்சர் நியமிக்கப்படலாம் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.