இசிஆர்எல் வைத்துக்கொள்ளப்படும், விலையைக் குறைக்கத் திட்டம்

சர்ச்சையாகியுள்ள   கிழக்குக்கரை   இரயில்   திட்டத்துக்கு   ஆகும்   செலவைக்  குறைப்பதற்குச்     சீனாவுடன்     மறுபேரம்   பேசி   மறு ஒப்பந்தம்      செய்துகொள்ள   முடியுமா    என்று    அரசாங்கம்   ஆராய்ந்து   வருகிறது  என  நிதி   அமைச்சர்   லிம்  குவான்  எங்   கூறினார்.

அத்திட்டத்துக்கு   மலேசியா  இதுவரை  ரிம20 பில்லியன்  செலவிட்டிருப்பதால்  அதைக்  கைவிடுவதற்கில்லை    என   மலேசியன்  இன்சைட்டுக்கு   வழங்கிய   நேர்காணலில்    அவர்  கூறினார்.

“இசிஆர்எல்-லுக்கு   ஏற்கனவே   ரிம20பில்லியன்  கொடுத்திருக்கிறோம். எனவே,  அதை  இரத்துச்   செய்வது  உசிதமல்ல.

“மறுபேரம்   பேசவுள்ள   திட்டங்களில்   அதுவும்   ஒன்று”,  என்றவர்  சொன்னார்.

தொடர்ந்து  லிம்,   கோலாலும்பூர்-  சிங்கப்பூர்   அதிவிரைவு    இரயில்   திட்டம்(எச்எஸ்ஆர்)   குறித்து  அரசாங்கம்  “இன்னும்  முடிவெடுக்கவில்லை”   என்றும்   அது  மறுபரிசீலனை   செய்யப்படுகிறது    என்றும்  கூறினார்.

“மறுபரிசீலனை   என்றால்   திட்டம்  மேற்கொள்ளப்படாமல்  போகலாம்,   ஒத்திவைக்கப்படலாம்.  மறுபேரம்   என்றால்  விலையைக்  குறைப்பது  பற்றிக்  கலந்துரையாடுவது”,  என்றார்.

அமைச்சர்  அது  குறித்து    மேல்விவரம்    தெரிவிக்க  மறுத்து  விட்டார்.